2025-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் உயர் மட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களுடைய ஆரம்ப பட்டப் படிப்பை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டம் – அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ‘ஒழுக்கநெறிமிக்க பிரசைகள் – வளர்ச்சியடைந்த மனிதவளம்’ என்னும் நோக்கத்தை வெற்றிகொள்ளும் முகமாக க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் உயர் மட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களுடைய ஆரம்ப பட்டப் படிப்பை சர்வதேச ரீதியில் தரவரிசைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்பதற்குத் தேவையான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப் பொன்றின் மூலம் 200 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சர்வதேச ரீதியில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தும் சுட்டெண்ணுக்கு அமைவாக முதல் 500 இடங்களில் உள்ள ஆங்கிலமொழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆகக்கூடுதலாக நான்கு (04) வருட கால பட்டப்பாட நெறிகளை பூர்த்தி செய்வதற்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐந்து (05) வருட கால திட்டத்தின் கீழ் 200 மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் முதலாம் கட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் 20 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. க.பொ.த. (உயர் தர) பரீட்சையின் பிரதான பாட திட்டத்தின் கீழ் உயர் Z – பெறுமதி (Z–Score) கொண்ட மாணவர்களுக்கு இதன் பொருட்டு விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களிலிருந்து பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்யும் செயற்பாடானது பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களையும் விரிவுரையாளர்களையும் கொண்ட நிபுணத்துவம் மிக்க நேர்முகப் பரீட்சை சபையொன்றின் ஊடாக மேற்கொள்ளப்படும். அதற்கிணங்க, உத்தேச புலமை பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |










