• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-03-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அஸ்வெசும நலன்புரி பிரதி லாபங்கள் கொடுப்பனவு திட்டத்தை திருத்துதல்
- அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவுத் திட்டம் 2023-07-01 ஆம் திகதி தொடக்கம் செயற்படுத்தப்பட்டதோடு, மேலும் இந்தத் திட்டம் இறுதியாக 2024-12-21 ஆம் திகதியிடப்பட்டதும் 2415/66 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் திருத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டிற்குள் நடைமுறையிலுள்ள அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரதிலாபங்களை பின்வருமாறு திருத்தி வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் வெளியிடுவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* அஸ்வெசும நலன்புரி பிரதிலாபங்கள் கொடுப்பனவுத் திட்டத்தின் I ஆம் அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையற்றவர்கள் பிரிவினருக்கு பிரதிலாபங்கள் உரித்துடையதாகும் காலத்தை 2025-04-30 ஆம் திகதி வரை நீட்டித்தல்.

* இந்த திட்டத்தின் II ஆம் அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சார்பில் வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகை மற்றும் சிறுநீரக உதவி பெறுபவர்கள் சார்பில் வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகை என்பவற்றை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல் முதியோர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரித்தல் மற்றும் இந்த தீர்மானத்தை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துதல்.

* அட்டவணை II இல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் முதியோருக்கான உதவித்தொகை ஆகியவற்றை மேற்போந்த பிரேரிப்புகளின் கீழ் செலுத்தும் காலத்தை 2025-12-31 ஆம் திகதி வரை நீடித்தல்.

* 2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் பிரிவின் கீழ் உதவித்தொகை நிறுத்தப்பட்டாலும் குறித்த இந்த குடும்பங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியவர்கள் சார்பில் வழங்கப்படும் உதவித்தொகையை செலுத்தும் காலத்தை 2025-12-31 ஆம் திகதி வரை நீடித்தல்.

* புதிதாக விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் ஆகியோர்களின் விண்ணப்பங்களை உச்ச எல்லைக்கு உட்பட்டு உள்வாங்கி, தகைமை பெறுபவர்களுக்கு 2025-12-31 ஆம் திகதி வரை உரிய கொடுப்பனவுகளைச் செலுத்துதல்.