• Increase font size
  • Default font size
  • Decrease font size

2025-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு விரிவான சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
– தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு சம்பந்தமாக அப்போது நிலவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமானது சட்டமாக்கப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமாக குறித்த சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்தி தேசிய பாதுகாப்பு பற்றிய விரிவான சட்டத்தினை பிரகடனப்படுத்துவற்கான இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பயங்கரவாத ஒழிப்பு பற்றிய சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குள்ளாக் கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த சட்டமூலத்திற்கு மேலும் செய்யவேண்டிய திருத்தங்களை இனங்கண்டு அத்தகைய திருத்தங்களையும் உள்ளடக்கி சட்டவரைநரினால் திருத்த சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி வரைவு தொடர்பில் மேலும் விடயங்களை ஆராய்ந்து இந்த சட்டமூலத்தை மேலும் விருத்தி செய்யும் பொருட்டு பொருத்தமான பிரேரிப்புகளை சமர்ப்பிப்பதற்காக சனாதிபதி சட்டத்தரணி திரு.ரியன்சி அர்ஷகுலரத்னவின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.