2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
"இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்கள் நிறுவனம்" என்னும் பெயரில் ஊடக உயர் கல்வி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனமொன்றைத் தாபித்தல் - ஊடகத் துறையில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்வி தரங்களுக்கு அமைவாக ஊடக கல்வித் துறையின் விருத்தி மற்றும் உயர் தரங்களை பாதுகாப்பதற்காக அரசாங்க அனுசரணையுடனான நிறுவனமொன்றைத் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. முக்கியமாக பாடசாலை முறைமையில் ஊடக விடயத்தினை கற்கும் பெருமளவு மாணவர்கள் இருக்கின்ற போதிலும் அவர்களுக்கான உயர் தரம்மிக்க போதுமானளவு கல்வி நிறுவனங்கள் இதுவரை தாபிக்கப்படவில்லை. பல்கலைக்கழக முறைமையினுள் மேற்கொள்ளப்பட்டுவரும் வெகுசன ஊடக பட்டப்பாடநெறிகள் சில இருக்கின்ற போதிலும் இந்த பாடநெறிகளின் ஊடாக தொழில்சார் ஊடகவியலாளர் ஒருவரை உருவாக்குவதற்கு போதுமான செய்முறை மற்றும் தொழிநுட்ப அறிவு கிடைக்காமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், ஏற்கனவே ஊடகத் துறையில் சேவைபுரியும் ஊடகவியலாளர்களுக்கு, ஊடக முகாமையாளர்களுக்கு அதேபோன்று ஊடகத் துறையில் இணைவதற்கு எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக விடயத்தினை கற்பதற்கு, தேவையான செய்முறை பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மற்றும் அவர்களுடைய ஆற்றலை விருத்திசெய்து தொழில் ரீதியிலான அபிவிருத்தியினை அதிகரித்துக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவதும் ஒழுக்கநெறியுடனும் சுயகட்டுப்பாட்டுடனும்கூடிய ஊடக கலாசாரமொன்றை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஊடகவியலாளர்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு வெகுசன ஊடக விடயம் சம்பந்தமாக சான்றிதழ் பாடநெறி தொடக்கம் பட்டம் மற்றும் பட்டப்பின் படிப்பு வரையிலான கல்வி வாய்ப்பினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் வெகுசன ஊடக உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனமொன்றாக "இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்கள் நிறுவனம்" என்னும் பெயரில் நிறுவனமொன்றைத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |