• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-03-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 - சகல பிரசைகளுக்கும் தங்களுடைய தாய்மொழியில் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணுவதற்கான உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அரசாங்க நிறுவனங்களில் சிங்களம் / தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அல்லது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் செயலாற்றக்கூடிய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை பெருமளவில் நிலவுகின்றது. இந்த பிரச்சினைக்கு இடைக்கால தீர்வொன்றாக மாவட்ட ரீதியில் இருமொழி / மும்மொழி தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பிலான தகவல்களைக் கொண்ட தரவுத்தளமொன்றைத் தாபிப்பதற்கும் இந்த தரவுத்தளத்தின் தகவல்களை அனைத்து அரசாங்க நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு திறந்து வைப்பதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய சேவையை அரசாங்க நிறுவனங்களுக்கு பெற்றுக் கொள்வதற்கும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2 - 22 வருட சேவைக்காலம் பூர்த்தியாவதன் மேல் அல்லது ஒரே பதவியொன்றில் இருக்கக்கூடிய உச்சக்காலம் முடிவடைவதன் மீது முப்படைகளையும் சேர்ந்த தொழினுட்ப மற்றும் தொழிற் தகைமைகளை / அனுபவத்தைக் கொண்ட பல்வேறுபட்ட தரங்களுக்குரிய உத்தியோகத்தர்கள் பெருமளவில் வருடாந்தம் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இந்த உத்தியோகத்தர்களுக்கிடையில் கணிசமான அளவு பொறியியலாளர்கள், அளவையாளர்கள், மருத்துவர்கள், தாதிமார்கள், நிறைவுகாண் மற்றும் துணைமருத்துவ சேவையைச் சேர்ந்தவர்கள், தொழினுட்ப, விளையாட்டு போன்ற பல்வேறுபட்ட தொழில் மற்றும் தொழினுட்ப தேர்ச்சிமிக்கவர்கள் ஆவதோடு, இவர்கள் ஓய்வுபெறும் வயது அண்ணளவாக 42 தொடக்கம் 45 வயதாகும். இவர்கள் தொடர்ந்தும் சேவையாற்றக்கூடிய விதத்தில் உளரீதியிலும் தேகாரோக்கிய நிலையிலும் சிறந்த நிலையில் உள்ளவர்களாவர். இந்த மனிதவளத்தை தேசிய அபிவிருத்திக்கு பயன்மிக்கதாக பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் அரசாங்க சேவையில் காணப்படும் தொழினுட்ப மற்றும் தொழில் தேர்ச்சிமிக்கவர்களின் பற்றாக்குறைக்கு மாற்றீடாக தொழில் தகைமைகளைக் கொண்ட இராணுவ சேவையிலிருந்து இளைப்பாறிய உத்தியோகத்தர்களின் சேர்மம் ஒன்றை பாதுகாப்பு அமைச்சில் நடாத்திச் செல்வதற்கும் இந்த சேர்மத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைப்பாறிய உத்தியோகத்தர்களின் சேவையை தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்க நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
3 - 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பதவிநிலை கல்லூரியானது நாட்டிலுள்ள உயர் யுத்த பயிற்சி நிறுவனமாகும். நல்லெண்ண வெளிப்பாடாக 2009 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பாடநெறிகளை கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கைக்கு உரியதாகும் நற்பெயர், அந்நிய செலாவணி, அறிவு, அனுபவம் பரிமாறல் என்னும் விடயங்களை கருத்திற்கொண்டு 2017 ஆம் ஆண்டில் வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு கட்டண அடிப்படையில் பத்து பயிற்சி வாய்ப்புகளையும் 22 இலவச பயிற்சி வாய்ப்புகளையும் வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
4 - இந்த நாட்டுக்கு உரிமையல்லாத சில ஆக்கிரமிப்பு பயிர்கள் உயிரினங்கள் மற்றும் அவை துரிதமாக வியாபித்துச் செல்வதன் காரணமாக இலங்கையின் இயற்கை மற்றும் கம சுற்றாடல் முறைமைகளுக்கும் அதேபோன்று அவை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு ஏற்புடையதாக்கிக் கொள்ளக்கூடிய சட்டங்கள் இருந்தாலும் இதனால் உருவாகும் சுற்றாடல், பொருளாதார, சமூக பாதிப்புகளை கருத்திற் கொள்ளும் போது இலங்கையில் ஆக்கிரமிப்புசெய்துள்ள அந்நிய பயிர்கள் மற்றும் உயிரினங்கள் வியாபித்துச் செல்வதை கட்டுப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்கு முறையாக தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கையொன்று தேவையெனத் தெரியவந்துள்ளது. இதற்கமைவாக ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்நிய பயிர்கள் மற்றும் உயிரினங்கள் வியாபித்து செல்வதை கட்டுப்படுத்துதல், அவற்றினால் உயிரினப் பல்வகைமைக்கு சுற்றாடல் முறைமைக்கு, பொருளாதாரத்திற்கு, சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பினை குறைப்பதற்காக சகல தரப்பினர்களுக்கும் உரிய துறை தொடர்பில் நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்நிய உயிரினங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைக்கும் அதற்குரியதான திறமுறை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைபடுத்தும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
5 - நாளுக்கு நாள் மருத்துவ சிகிச்சைக்காக அதிகரித்து செல்லும் செலவினை கவனத்திற்கொண்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் முகாமிக்கப்படும் 'அக்கிரஹார காப்புறுதித் திட்டம்' மூலம் அரசாங்க ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சுகாதார காப்புறுதி நலன்களை மேலும் விரிவுபடுத்துவது சம்பந்தமாக சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக இளைப்பாறிய அரசாங்க ஊழியர்களையும் உள்ளடக்கும் விதத்தில் நெகிழ்ச்சிமிக்கதாகவும் உயர் நலன்கள் கிடைக்கக்கூடியவாறும் 'அக்கிரஹார காப்புறுதித் திட்டம்' நடைமுறைப்படுத்தப்படுவதன் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
6 - வௌ்ளம், வரட்சி உட்பட ஏனைய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக விவசாயிகளுக்கு அவர்களுடைய பயிர்கள் சேதமடைவதனால், அவர்கள் பெற்ற கடன்களை செலுத்துவதற்கு இயலாமற் போகும் சந்தர்ப்பங்களில் எழும் பிரச்சினையான நிலைமைகளின் போது விவசாயிகளுக்கும் வங்கி மற்றும் கமத்தொழில் கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் காப்பினை வழங்கும் பொருட்டும் இடையூறின்றி அடுத்த போகத்தில் விவசாயிகளுக்கு கடன் பெற்றுக் கொள்ளும் வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் தேசிய கமத்தொழில் கடன் பாதுகாப்பு திட்டமொன்றை உருவாக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
7 - 2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் துரிதமாக வளர்ச்சி அடையும் துறையாக சுற்றுலா கைத்தொழில் மாறியுள்ளது. Google நிறுவனத்தினால் செய்யப்பட்ட அண்மைக்கால ஆய்வுவொன்றுக்கு அமைவாக உலகின் சுற்றுலா பயணிகளின் 50 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு அவர்களுடைய அடுத்த சுற்றுலா நிலையத்தை அல்லது அங்கு தங்கவேண்டிய இடம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் செயற்படுகின்றமை தெரியவருகின்றது. ஏற்கனவே உலக சனத்தொகையின் 40 சதவீதத்திற்கு கூடுதலானோர் இணையதளத்தை பயன்படுத்துவதோடு, சுற்றுலா பயணிகளுக்கு அவர்களுடைய பயண இடம்பற்றி தீர்மானிப்பதற்குத் தேவையான பின்னணியைத் தயாரிக்கும் போதும் சுற்றுலா பயண இடங்களை பிரபல்யப்படுத்தும் போதும் இணையத்தை ஊடகமாகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் முன்னுரிமை பெறுகின்றன. இந்த நாட்டின் சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக இனங்காணப்பட்ட சந்தைகளை குறியிலக்காகக் கொண்டு திறமுறை டிஜிட்டல் வர்த்தக நிகழ்ச்சித்திட்டமொன்றை 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
8 - வலது குறைந்த இராணுவ வீரர்களுக்கு விசேட சலுகை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஓர் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "விருசர" சிறப்புரிமை அட்டை மூலம் வலது குறைந்த இராணுவ வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசாங்க மற்றும் சில தனியார் நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது குறித்த சேவைகளுக்காக சலுகை பெற்றுக் கொள்ளும் சிறப்புரிமையை அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையை மேலும் விரிவுபடுத்தி "விருசர" சிறப்புரிமை அட்டை உரித்துடைய வலது குறைந்த இராணுவ வீரர்களுக்கு புகையிரத பயணச்சீட்டுக்கான பெறுமதியின் 50 சதவீதத்தை மாத்திரம் செலுத்தி புகையிரதத்தில் பயணிப்பதற்கான வாய்ப்பினை ஏற்பாடு செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
9 - வங்காள விரிகுடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் கண்ட எல்லையை நிர்ணயிக்கும் பொருட்டிலான விடயம் சம்பந்தமாக இலங்கை கண்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு அதன் விடயமுன்வைப்பினை 2009 ஆம் ஆண்டில் செய்தது. இலங்கையின் இந்த விடய முன்வைப்பை ஆணைக்குழு 2017-2022 காலப்பகுதிக்குள் கவனத்தில் எடுக்கும் சாத்தியம் நிலவுகின்றது. இங்கு இலங்கை சார்பில் முன்வைக்கப்படும் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கும் இது சம்பந்தமாக ஏனைய நாடுகளினால் சமர்ப்பிக்கக்கூடிய எதிர் கருத்துகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும் சருவதேச ரீதியில் பெயர் பெற்ற நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
10 - அமைச்சரவையினால் தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடய முன்வைப்பு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தேச விஞ்ஞான நிலையத்தை ஹோமாகம. மாஹேன பிரதேசத்திலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியொன்றில் தாபிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
11 - இலங்கையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆராய்ச்சி கலாசாரமொன்றை உருவாக்குவதற்கும் அது தொடர்பிலான ஊக்கத்தை மக்களிடத்தில் உருவாக்கும் நோக்கத்துடனும் ஏற்கனவேயுள்ள தேசிய ஆராய்ச்சி சபையை நியதிச்சட்ட நிறுவனமொன்றாக தாபிப்பதற்கு வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
12 - இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் சீனா தேசிய இயற்கை விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்பத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையானது மாண்புமிகு பிரதம அமைச்சரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
13 - சிக்கனமான மின்சார பாவனை பற்றி பொதுமக்களுக்கு அறியச் செய்வித்தல், மின் உபகரணங்கள் மற்றும் தொழினுட்பத்தைப் பயன்படுத்துதல் பல்வேறுபட்ட பொருளாதார, சமூக ஒழுங்குகளை மாற்றுதல் என்பன மூலம் மின்சாரத்துக்கான கேள்வியை குறைப்பதன் ஊடாக எதிர்வரும் ஐந்து (05) வருட காலத்திற்குள் சுமார் 1,000 மணித்தியால கிகாவொட் சக்தியை சேமித்துக் கொள்ளலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் எதிர்வரும் ஐந்து (05) வருட காலத்திற்கு புதிதாக ஆரம்பிக்க வேண்டிய சுமார் 500 மெகாவொட் ஆற்றல் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிக்கும் தேவையை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கமைவாக, மின்சாரத்தின் வினைத்திறன் மிக்க பாவனை மற்றும் காப்பினை மேம்படுத்தும் பொருட்டிலான நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மின்சாரசபை, இலங்கை மின்சார தனியார் கம்பனி மற்றும் இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டமானது வர்த்தக, கைத்தொழில் அதேபோன்று அரசாங்க துறையினதும் விரிவான பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காக சனாதிபதி செயலணியொன்றையும் தேசிய தொழிற்பாட்டுக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
14 - வெள்ளை பணமாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தல் போன்றவற்றை குறைக்கும் பொருட்டு சருவதேச தரங்களை அடைவதற்காக நம்பிக்கை பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் விடயநோக்கெல்லையை விரிவுபடுத்தி திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
15 - பெருந்தோட்ட மக்களின் சமூக, கலாசார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வீடுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் புதிய கிராமங்களையும் நகரங்களையும் நிருமாணிக்கும் பிரதான பணியானது மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சமூக மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (2016 - 2020) இந்த அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குறியிலக்குகளையும் உரிய காலப்பகுதிக்குள் அடைவதற்கும் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளையும் கடமைகளையும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டும் அதிகாரசபை யொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, "மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை" தாபிக்கப்படும் பொருட்டு சட்டமூலமொன்றை வரைவதற்காக செயலணியொன்றை நியமிக்கும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
16 - இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளுக்கு எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்யும் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கேள்விதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
17 - இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து டயர்களை மீள உருவாக்குதல் மற்றும் முற்பதன முறை சார்ந்த சேவைகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கேள்விதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
18 - தெற்கு அதிவேகப் பாதையையும் அதனுடன் தொடர்புபடும் தேசிய நெடுஞ்சாலைகளினதும் பயன்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையானது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தின் கீழ் தெற்கு அதிவேகப் பாதையிலிருந்து மாதுருகொட வரை B 157 (கிழக்கு) வீதியின் 10 கிலோ மீற்றர்கள் கொண்ட வீதிப் பகுதியை ஐந்து வருடகால செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்டு பராமரிப்பு அடங்கலாக புனரமைத்து விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கேள்விதாரருக்கு வழங்குவதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
19 - பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டு சார்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியம் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை திட்டமானது அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
20 - இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த உர மானிய நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பதிலாக 2016 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக விவசாயிகளுக்குத் தேவையான உரத்தினை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு திறந்த சந்தையில் கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் நாடு பூராவுமுள்ள சுமார் பத்து இலட்சம் விவசாயிகளுக்கு 2016 சிறுபோகத்தின் சார்பில் ஹெக்டயார் ஒன்றுக்கு 25,000/- ரூபா வீதம் ஆகக்கூடுதலாக இரண்டு ஹெக்டயார்கள் வரை பணமாக வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
21 - ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் உடன்பாடுகள் தொடர்பிலான உடன்படிக்கைக்கு 2015 சனவரி மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்டு இலங்கை இந்த வங்கியின் ஒருதரப்பாகியுள்ளது இந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் இலங்கையினுள் சட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்குமாக தயாரிக்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி உடன்படிக்கை (வலுவாக்கம் செய்தல்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து, அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
22 - அண்மைய மின்சார செயலிழப்பு பற்றியும் எதிர்காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது சம்பந்தமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியதுமான விடயங்கள் அமைச்சரவையினால் ஆழமாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

(i) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சார செயலிழப்பு சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினாலும் மாண்புமிகு பிரதம அமைச்சரினால் திரு.சீ.மாலியத்த அவர்களின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும்.

(ii) எதிர்வரும் காலங்களில் போதுமான அளவு மழை கிடைக்காவிட்டால் எழக்கூடிய மின்சார உற்பத்தி எல்லைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தேவையான மின்சார அளவினை மாத்திரம் தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்வதற்குத் தேவைாயன நடவடிக்கைகளை எடுப்பதற்கும்.
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.