• Increase font size
  • Default font size
  • Decrease font size
அமைச்சரவை பற்றியது


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு




இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் நியதிகளின் பிரகாரம்


பிரதம அமைச்சரும் அமைச்சரவையும்

01. குடியரசின் அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பாக்கப்பட்ட ஓர் அமைச்சரவை இருத்தல் வேண்டும் [உறுப்புரை 43(1)]

02. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு கூட்டாக பொறுப்பாகவிருத்தலும் வகை சொல்லற்பாதலும் வேண்டும் [உறுப்புரை 43(1)]

03. சனாதிபதி, அமைச்சரவையின் ஓர் உறுப்பினராயிருத்தல் வேண்டும் என்பதுடன் அமைச்சரவையின் தலைவராயிருத்தலும் வேண்டும்.[உறுப்புரை 43(2)]

04. சனாதிபதி, அவரது கருத்துப்படி பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவாராக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரை பிரதம அமைச்சராக நியமித்தல் வேண்டும்.[உறுப்புரை 43(3)]

அமைச்சர்களும் அவர்களின் விடயங்களும் பணிகளும்

01. சனாதிபதி காலத்துக்குக் காலம் பிரதம அமைச்சரின் கலந் தாலோசனையுடன், அத்தகைய கலந்தாலோசனை அவசியமானதென அவர் கருதுமிடத்து, அமைச்சரவையின் அமைச்சர்களினதும், அமைச்சுக்களது எண்ணிக்கையையும் அத்தகைய அமைச்சர்களுக்குக் குறித்தொதுக்கப்படவுள்ள பணிகளையும், விடயங்களையும் தீர்மானித்தல் வேண்டும்[உறுப்புரை 44(1)(அ)]

02. சனாதிபதி, பிரதம அமைச்சரின் மதியுரையின் மீது அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக இருப்பதற்கென பாராளுமன்றத்தின் உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை நியமித்தல் வேண்டும்.[உறுப்புரை 44(1)(ஆ)]

03. சனாதிபதி எந்நேரத்திலும் அமைச்சரவையின் விடயங்களதும் பணி களதும் குறித்தொதுக்குதல்களையும், அமைப்பையும் மாற்றலாம். அத்தகைய மாற்றங்கள் அமைச்சரவையின் இடையறாத் தொடர்ச்சியையும் பாராளுமன்றத்துக்கு அதற்குள்ள பொறுப்புடைமையை இடையறா தொடர்ச்சியையும் பாதித்தல் ஆகாது.[உறுப்புரை 44(3)]

அமைச்சரவையின் உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்கள்

01. சனாதிபதி பிரதம அமைம்சரின் மதியுரையின் மீது, பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சரவையின் உறுப்பினர்கள் அல்லாதவர்களை அமைச்சர்களாக நியமிக்கலாம்.[உறுப்புரை 45(1)(அ)]

02. சனாதிபதி அத்தகைய கலந்தாலோசனை அவசியமானதென அவர் கருதிகின்றவிடத்து, பிரதம அசைம்சருடனான கலந்தாலோசனையுடன் இவ்வுறுப்புரையின் (1) ஆம் பந்தியின் கீழ் நியமிக்கப்படும் அத்தகைய அமைச்சர்களின் பொறுப்பில் இருக்க வேண்டிய அமைச்சுக்களின் விடயங்களதும் மற்றும் பணிகளதும் குறித்தொதுக்குதல்களையும் தீர்மானிக்கலாம்.[உறுப்புரை 45(1)(ஆ)]

03. சனாதிபதி இவ்வுறுப்புரையின் (1) ஆம் பந்தியின் கீழ்செய்யப்பட்ட ஏதேனும் குறித்தொதுக்குதலை எந்த நேரத்திலும் மாற்றலாம்.[உறுப்புரை 45(2)]

04. ஓராம் பந்தியின் கீழ் நியமிக்கப்படும் ஒவ்வொரு அமைச்சரும் அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் பொறுப்பாதல் வேண்டும்.[உறுப்புரை 45(3)]

05. அமைச்சரவையின் ஏவரேனும் அமைச்சர், அவருக்கு குறித்தொதுக்கப்பட்ட ஏவரேனும் விடயத்திற்குரிய அல்லது பணிக்குரிய ஏதேனும் தத்துவத்தை அலலது கடமையை அல்லது ஏதேனும் எழுத்திலான சட்டத்தின்மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட அல்லது அவர் மீது சுமத்தப்பட்ட ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை, அமைச்சரவையின் உறுப்பினர் அல்லாத எவதேனும் அமைச்சருக்கு வர்த்தமானியில் வெளியிடப்படும் அறிவிப்பு மூலம் கையளிக்கலாம். அத்துடன் இந்தப் பந்தியின் கீழ் அவருக்கு கையளிக்கப்பட ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை, அத்தகைய தத்துவம் அல்லது கடமை அமைச்சரவையின் அத்தகைய அமைச்சர் மீது அளிக்கப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட எழுத்திலான சட்டத்தில் முரணாக எது எவ்விதம் இருப்பினும், பிரயோகித்தலும் புரிதலும் அத்தகைய அமைச்சருக்கு சட்டமுறையானதாதல் வேண்டும்.[உறுப்புரை 45(4)]

பிரதியமைச்சர்கள்

01. சனாதிபதி, பிரதம அசைம்சரின் மதியுரையின்மீது, அமைச்சரவை அமைச்சர்கள் தமது கடமைகளைப் புரிவதில் அவர்களுக்கு உதவுவதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து பிரதி அமைச்சர்களை நியமிக்கலாம்.[உறுப்புரை 46(1)]

02. அமைச்சரவையின் எவரேனும் அமைச்சர் அவருக்கு குறித்தொதுக்கப்பட்ட ஏதேனும் விடயம் அல்லது பணி தொடர்பிலான ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை அல்லது ஏதேனும் எழுத்திலான சட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட அல்லது அவர் மீது சுமத்தப்பட்ட ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை வர்த்தமானியில் வெளியிடப்படும் அறிவிப்பின் மூலம் அவரது பிரதியமைச்சருக்கு கையளிக்கலாம். அத்துடன் இப்பிரிவின் கீழ் அந்தத் தத்துவம் அல்லது கடமை அத்தகைய அமைச்சருக்கு அல்லது அவர்மீது எந்த எழுத்திலான சட்டத்தினால் அளிக்கப்பட்டுள்ளதோ அல்லது சுமத்தப்பட்டுள்ளதோ அந்த எழுத்திலான சட்டத்தில் முரணாக எது எப்படியிருப்பினும், இப்பந்தியின் கீழ் அவருக்குக் கையளிக்கப்ப்ட ஏதேனும் தத்துவத்தை அல்லது கடமையை பிரயோகிப்பதும் புரிவதும் அத்தகைய பிரதியமைச்சருக்கு சட்டமுறையானதாதல் வேண்டும்.[உறுப்புரை 46(2)]