• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுங்கத்திற்காக கொள்கலன் நகர்வினை தடமறிதல் மற்றும் கண்காணித்தல் முறைமை
- இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் சுமார் 1,150 இலிருந்து 1,450 வரை இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களும் சுமார் 350 இலிருந்து 450 வரை ஏற்றுமதி செய்யப்படும் கொள்கலன்களும் நாளொன்றினுள் கையாளப்படுகின்றன. இதன்போது உரிய பொருட்களை இறக்குமதியாளர்களுக்கு விடுவிப்பதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு, சில அபாயகரமான பொருட்கள் மேலதிக பரிசோதனைக்காகவும் இசைவாக்கத்திற்காகவும் விசேட இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பொருட் தொகைகளின் பாதுகாப்புக்காக கொள்கலன்களின் கதவுகளின் மீது உலோக பொறிகள் இடப்படுகின்றன. ஆயினும், நடைமுறைக்கு ஏற்றவாறு இந்த பணிகளை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க, கொள்கலன் நகர்வு மற்றும் கண்காணித்தல் சார்பில் நவீன தொழினுட்பத்துடன் கூடிய கருவிகளை அறிமுகப்படுத்துவதற்கும் இதன் மூலம் கொள்கலன்களிலுள்ள பொருட்கள் பற்றி தொடர்ச்சியான கண்காணிப்பினை மேற்கொள்வதற்கும் கொள்கலன்களின் நகர்வினை தடமறிந்து கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று கொள்கலன்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் பொருட்டு தேவையான நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட நவீன தொழினுட்பத்தை அறிமுகப்படுத்து வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் சார்பில் பொருத்தமான வழங்குநர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பெறுகை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.