• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பிலிபைன்சுக்கும் இடையில் 06 புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
- அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பிலிபைன்ஸ் விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையையும் அபிவிருத்தியையும் நோக்காக கொண்டு பின்வரும் ஆறு உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல.07) - சுற்றுலாத்துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுலா பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், முதலீடுகள் மற்றும் இருதரப்பினாலும் தீர்மானிக்கப்படும் ஏனைய பிரிவுகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டு இலங்கைக்கும் பிலிபைன்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த பிரேரிப்பு

வெளிநாட்டு தொழில் வாய்ப்புத்துறை ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் (விடய இல.68) - இரு நாடுகளுக்கும் இடையில் ஊழியர் நலனோம்பல் மற்றும் உரிமைகளை பாதுகாத்தல், விளைவுப்பெருக்கம், சேவை நிலைமை, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துதல், புலம்பெயரும் ஊழியர்களை பயிற்றுவித்தல் மற்றும் உறுதிப்படுத்தல், ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு சட்ட உதவிகளை வழங்குதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக இலங்கைக்கும் பிலிபைன்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்கள் சமர்ப்பித்த பிரேரிப்பு.

உயர் கல்வி துறையில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல.69) - இரு நாடுகளுக்கும் இடையில் உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிலிபைன்ஸ் குடியரசின் உயர்கல்வி ஆணைக்குழுவுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த பிரேரிப்பு.

கமத்தொழில் மற்றும் அது சார்ந்த துறைகளை தழுவும் புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல.70) - இரு நாடுகளுக்கும் இடையில் பயிர்செய்கை , கடற்றொழில், மிருக வளர்ப்பு கட்டுப்பாடு, கோழி வளர்ப்பு கட்டுப்பாடு, கமத்தொழில் பதனிடல் பெறுமதி சேர்த்தல், உற்பத்திகளை விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் பிலிபைன்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்கள் சமர்ப்பித்த பிரேரிப்பு.

தேசிய கமத்தொழில் ஆராய்ச்சி முறைமையின் ஆராய்ச்சியாளர்களுக்கு வௌிநாட்டு பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை நடாத்துவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல் (விடய இல.71) - தேசிய கமத்தொழில் ஆராய்ச்சி முறைமையின் ஆராய்ச்சியாளர்களுக்கு வௌிநாட்டு பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை நடாத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு பிலிப்பைன்ஸ் லொஸ் பானோஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்காக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்கள் சமர்ப்பித்த பிரேரிப்பு.

இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்புத்துறையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் (விடய இல.73) - இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு, இராணுவக் கற்கை, பயிற்சி, பாதுகாப்பு மற்றும் இராணுவ தூதுக்குழு பரிமாற்றம், கூட்டுப்பயிற்சி, நட்பு விஜயங்கள் மற்றும் மாநாடுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் பிலிபைன்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு.