• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட துறை சுகாதார வசதிகளை தரமுயர்த்துதல்
இந்த நாட்டின் பெருந்தோட்டங்களில் 220,000 இற்கும் கூடுதலான குடும்பங்கள் உள்ளன. பெருந்தோட்ட துறையிலுள்ள தொழிற் படையின் 90 சதவீதமானோர் பெண்களை உள்ளடக்கியுள்ளதுடன், அந்தப் பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளினதும் கர்ப்பிணி தாய்மார்களினதும் போஷாக்கு நிலைமையானது நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவான மட்டத்தில் உள்ளது. ஆதலால், பெருந்தோட்டத்துறையில் சுகாதார வசதிகளை தரமுயர்த்துவதற்கான முன்னுரிமையினை வழங்கும் தேவைப்பாடு இனங்காணப்பட்டுள்ளது. தற்போது பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் கிட்டத்தட்ட 450 தோட்டப்புற சிகிச்சை நிலையங்கள் உள்ளதுடன் கூறப்பட்ட சிகிச்சை நிலையங்களை தரமுயர்த்துவதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் சுகாதார நிலைமையை முன்னேற்றுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, ஏனைய கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு அரசாங்கத்தினால் சேவைகள் வழங்கப்படுவதைப் போன்ற விதத்தில் சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்கள் வசதி வாய்ப்பாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கத்தின் சுகாதார வலையமைப்புடன் பெருந்தோட்ட சுகாதார வலையமைப்பை ஒன்றிணைக்கும் பொருட்டும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சகல பெருந்தோட்ட சுகாதார நிறுவனங்களையும் கட்டம்கட்டமாக அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.