• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு புறநகர் புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தை (CSREIP) நடைமுறைப்படுத்துதல்
- பொது போக்குவரத்து சேவைகளை விருத்தி செய்வதன் மூலம் வினைத்திறன் மிக்க பயணிகள் போக்குவரத்து சேவையொன்றை வழங்கும்போது நாட்டின் புகையிரத சேவையை அபிவிருத்தி செய்வது முக்கிய பணியொன்றாக அரசாங்கம் இனங்கண்டுள்ளது. இதற்கமைவாக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கடன் உதவித் தொகையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 'கொழும்பு புறநகர் புகையிரத கருத்திட்டத்தின்' கீழ் கொழும்பு நகரத்தை ஏனைய பிரதேசங்களுடன் இணைக்கும் புறநகர் புகையிரத பாதை முறைமையை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படவுள்ள' கொழும்பு புறநகர் புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் (CSREIP)' மூலம் புகையிரத வினைத்திறனை விருத்தி செய்யும் பொருட்டு தேவையான பின்வரும் சிறிய அளவிலான கருத்திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

* தற்போது நடைமுறையிலுள்ள புகையிரத அனுமதிச்சீட்டுக்கள் மற்றும் புகையிரத ஆசனங்களை முன்கூட்டி பதிவு செய்தல் வழிமுறைக்குப் பதிலாக அனுமதிச்சீட்டுக்கள் முன்கூட்டி பதிவு செய்தல் தொடர்பில் நவீன வழிமுறையொன்றை நடைமுறைப்படுத்துதல்.
* புகையிரத பயணிகளுக்கு ஒலிபரப்பு சேவைகளை வழங்குவதற்கு புதிய முறைமையொன்றை தயாரித்தல்.
* கொழும்பு, மாளிகாவத்தை பாடசாலை ஒழுங்கை புகையிரத பாதை பாலத்தை விரிவுபடுத்தி மீள நிருமாணித்தல்.
* கொழும்பு புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் புகையிர பாதை தொழிற்பாட்டு நிலையம் என்பவற்றை நிருமாணித்தல்.
* புதிய தொழினுட்ப முறைமை மற்றும் வழிமுறைகளை உள்வாங்கி இலங்கை - ஜேர்மன் புகையிரத பாதை தொழினுட்ப பயிற்சி நிலையத்தின் பயிற்சி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல்.
* இரத்மலானை புகையிரத இயந்திர பொறியியல் திணைக்களத்துக்கு இயந்திர மற்றும் பயணிகள் பெட்டி திருத்த வேலைகளைச் செய்யும் வேலைக்களமொன்றை வழங்குதல்.
* புகையிரத பாதை ஒதுக்கங்களில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக 02 வீடமைப்புத் திட்டங்களை நிருமாணித்தல்.
இதற்கமைவாக, மேற்போந்த துணைக் கருத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்ட கொழும்பு புறநகர் புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தை (CSREIP) நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.