• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச பாடசாலைகள் பதிவுசெய்தலை முறைப்படுத்துதல்
- சர்வதேச பாடசாலைகளை பதிவுசெய்தல், ஒப்புதல் அளித்தல், ஒழுங்குறுத்தல் சம்பந்தமாக இதுவரை சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆக்கப்படா மையினால், பல்வேறுபட்ட முறையற்ற பதிவுசெய்தல் முறைகளின் ஊடாக வரையறையின்றி உரிய தரங்களைப் பேணாது சர்வதேச பாடசாலைகள் நாடுபூராகவும் தாபிக்கும் பாங்கு காணப்படுகின்றது. இந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 95 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் இலங்கை மாணவர்கள் என்பதனால் நாட்டின் தேவைக்கு ஏற்ற தரம் மிக்க கல்வியினை இந்த மாணவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதனை உறுதிப்படுத்துதல் வேண்டும். அபிவிருத்தி செயற்பாட்டிற்கு பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்காக வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்கும் போதும் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வருகைதருவதை ஈர்கும் போதும் உரிய முறையில் தரப்படுத்தப்பட்ட சர்வதேச பாடசாலைகள் இருப்பது அத்தியாவசியமான முக்கிய காரணியொன்றாகும்.

இதற்கமைவாக இது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் செய்யப்பட்ட பிரேரிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, முறையான சட்ட கட்டமைப்பொன்று தயாரிக்கப்படும் வரை கல்வி அமைச்சினால் வழங்கப்படும் சிபாரிசின் மீது, சர்வதேச பாடசாலைகள் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதனை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், சர்வதேச பாடசாலைகளை பதிவுசெய்தல், ஒப்புதல் அளித்தல், ஒழுங்குறுத்தல், தரம் தொடர்பில் உறுதிப்படுத்தல் மற்றும் மேறபார்வை செய்தல் போன்றவற்றுக்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்தல், இந்த பாடசாலைகளின் ஆசிரியர்களை பயிற்றுவித்தல், சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு சிங்களம், தமிழ், சமயம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களை கற்பித்தலை கட்டாயப்படுத்துதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.