• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமையைப் பலப்படுத்தும் கருத்திட்டம்
சிறுவர் மற்றும் மகப்பேற்று சுகாதார சேவைகள் மற்றும் தொற்று நோய்கள் பற்றிய முகாமைத்துவமானது இலவச சுகாதார சேவை குறித்து அதன் வெற்றியை எட்டியுள்ள போதிலும் முதியோர் சனத்தொகை வளர்ச்சி மற்றும், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் சுகாதார கேடான நடைமுறைகள் காரணமாக தொற்றா நோய்கள் பரவுதல் போன்ற மேலதிக சவால்களைக் கையாள வேண்டியுள்ளது. ஆரம்ப சுகாதார பராமரிப்பு மட்டத்தில், தொற்றா நோய்களுக்கு மேலதிகமாக டெங்கு காய்ச்சல், காசநோய் மற்றும் எச்.ஐ.வி / எயிட்ஸ் போன்ற தொற்று நோய்கள் மீது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக, இலங்கையில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை வசதிகளை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையொன்றாக மாறியுள்ளது என்பதுடன் அதற்கிணங்க, அது தொடர்பில் வகுக்கப்பட்ட 'உலகளாவிய சுகாதார தழுவுகையை இலக்காகக் கொண்ட சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் கொள்கையினை' அமுல்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்கீழ், முழுமையானதும் தரம் மிக்கதுமான சுகாதார சிகிச்சை சேவையொன்றை வழங்குவதற்கு ஏதுவாக நாட்டில் நிலவும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமையிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமையினை வலுவூட்டுவதற்காக ஐந்து (05) வருட கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், சலுகை நியதிகளின் கீழ் வழங்கும் பொருட்டு உலக வங்கியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறான 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட நிதியங்களைப் பயன்படுத்தி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.