• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக கம்பனிகளின் கீழ் நிருவகிக்கப்படும் அரசாங்க பெருந்தோட்டங்களிலிருந்து காணிகளை பெற்றுக் கொள்ளல்
பெருந்தோட்ட சமுதாயப் பிள்ளைகளின் கல்வி நோக்கங்கள் கருதி 843 எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் தாபிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிப் பிரதேசமானது இப்பாடசாலைகளுக்கு நிலையாக அமைக்கப்படாத போதிலும் ஒவ்வொரு பாடசாலைக்கும் 2 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கையளவில் இணங்கியுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வசமிருந்த பெருந்தோட்டங்கள் குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளமையினால், பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆகக்கூடியது 2 ஏக்கர் கொண்ட காணியானது இப்பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் கருதி தனியார் கம்பனிகளிடமிருந்து பெற்றக் கொள்ளப்படவேண்டியுள்ளது.

அதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட இடவசதியுடன் தற்போது நடாத்தப்பட்டு வரும் 7 மாவட்டங்களில் அமைந்துள்ள 354 பெருந்தோட்ட பாடசாலைகள் சார்பில் தலா ஆகக்கூடியது 2 ஏக்கர் கொண்ட காணியை உரிய கம்பனிகளுடமிருந்து சுவீகரிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினாலும் அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினாலும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.