• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிலை உற்பத்திகளுக்கான நியம சாதாரண பொதிகளை அறிமுகப்படுத்துதல்
புகையிலை பாவனையின் மூலம் உருவாகும் நேரடி அல்லது மறைமுக தாக்கங்கள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை 25,000 க்கும் அதிகமென கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த காலம் முழுவதும் புகையிலை மற்றும் மதுசார பாவனையை தடுப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறாக 2011 ஆம் ஆண்டில் 29 சதவீதமாக நிலவிய இலங்கையின் வயதுவந்த ஆண்களுக்கு இடையேயான புகையிலை பாவனை 2015 ஆம் ஆண்டில் 24 சதவீதமாக குறைவடைந்துள்ளது. எதிர்வரும் 4 வருட காலப்பகுதிக்குள் இந்த அளவினை 15 சதவீதம் வரை குறைத்து கொள்வதன் மூலம் புகையிலை பாவனை காரணமாக வருடாந்தம் நிகழும் மரணங்களை சுமார் 6,000 வரை தவிர்த்துக் கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கமைவாக புகைபிடித்தலை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்கான திறமுறையொன்றாக புகையிலை உற்பத்திகளுக்கான பொதிகளில் காணப்படும் ஈர்ப்பினை குறைக்கும் விதத்தில் "நியம சாதாரண பொதிகளை" அறிமுகப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன்போது புகையிலை உற்பத்திகளுக்கான பொதிகளில் இரண்டு வர்ணங்கள் அல்லது வௌ்ளை மற்றும் கறுப்பு வர்ணங்களை மாத்திரம் பயன்படுத்தலாமென்பதோடு, வர்த்தக பெயர், உற்பத்தி பெயர், உற்பத்தி அளவு மற்றும் சுகாதார கேடுகளை குறிப்பிடுதல் போன்ற அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அல்லது கட்டாயமாக்கப்பட்ட தகவல்கள் அல்லது குறியீடு தவிர வேறு எவற்றையும் இந்த பொதிகளில் வௌிப்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. இந்த திறமுறையானது புகையிலை விற்பனையை கணிசமான அளவு குறைப்பதற்கு ஏதுவாய் அமையுமென வேறு நாடுகளின் அனுபவங்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நாட்டில் விற்பனை செய்யப்படும் புகையிலை உற்பத்திகள் சகலவற்றிற்கும் "நியம சாதாரண பொதிகளை" அறிமுகப்படுத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை செய்யும் நோக்கில், 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தேசிய புகையிலை மற்றும் மதுசார அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்கோ அல்லது இந்த சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை ஆக்குவதற்கோ தேவையான வரைவினை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.