• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மரக் கைத்தொழில் துறையின் பெறுமதியை மேம்படுத்துதல்
- இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பல்வேறுபட்ட கைத்தொழில்களின் அபிவிருத்தியுடன் ஒப்பிடும் போது மரம் மற்றும் மரம் சார்ந்த கைத்தொழில் துறை குறைந்த முன்னேற்றத்தைக் காட்டுகின்றது. காடுகளின் பாதுகாப்புக்கும் உற்பத்தி ஆற்றலுக்கும் இடையில் சம நிலையைப் பேணி இலங்கையில் மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்தி தொடர்பிலான கைத்தொழிலை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் நிலையான முகாமைத்துவம், அயனமண்டல வனவள பாவனை மற்றும் விற்பனை மேம்பாடு பற்றிய சருவதேச அயனமண்டல மர அமைப்பில் (International Tropical Timber Organization - ITTO) உறுப்புரிமையை இலங்கை பெற்றுக் கொள்வதற்கும் மர பொருள் உற்பத்தியாளர்கள் பெருமளவிலுள்ள மொறட்டுவை பிரதேசத்தில் மர வடிவமைப்பு புத்தாக்க நிலையமொன்றைத் தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச மர வடிவமைப்பு புத்தாக்க நிலையத்தின் மூலம் மர உற்பத்தியாளர்களுக்கு அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினதும் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தினதும் வடிவமைப்பு குழுக்களின் ஒத்தாசையுடன் பிரதான மர வகைகளை விருத்தி செய்து விசேட மரப் பதனிடல் வலயமொன்றாக மொறட்டுவைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதற்கமைவாக, மேற்போந்த பிரேரிப்புகளை நடைமுறைப் படுத்துவதற்காக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் உரிய நிறுவனங்களுடனும் பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.