• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கை நாட்டுக்கு உரியதான திறமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கமானது 1968 ஆம் ஆண்டிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி கட்டமைப்புக்கு இணங்க 2018 - 2022 வரையான காலப்பகுதியில் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தினால் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள திறமுறை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வரும் குறிக்கோள்களை அடைய எதிர்பார்க்கப்படுகின்றது.

* நெருக்கடி நிலைமைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு வருடம் முழுவதும் உணவினை வழங்குதல்.

* உணவு பெற்றுக்கொள்ள முடியாத பிரதேசங்களில் பாடசாலைக்கு செல்லும் வயதுடைய சிறார்களுக்கு வருடம் முழுவதும் உணவினை வழங்குதல்.

* 2025 ஆம் ஆண்டளவில் 5 வயதுக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகளினதும், பருவ வயதுடைய பெண் பிள்ளைகளினதும், இனப்பெருக்க வயதையுடைய பெண்களினதும் போசாக்கினை மேம்படுத்தல்.

* இடர்நிலைமைகளை எதிர்க்கொள்ளும் ஆற்றலை விருத்தி செய்து கொள்ளும் பொருட்டு இலகுவில் பாதிப்புறக்கூடிய சமுதாயத்தினதும் சிறுதோட்ட விவசாயிகளினதும் வாழ்வாதாரத்தை வலுவூட்டுதல்.

உலக உணவு நிகழ்ச்சித்திட்டமானது கூறப்பட்ட திறமுறைத்திட்டத்தின் அமுலாக்கம் கருதி 46.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரை வழங்குவதற்கு அதன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, மானிய உதவியினை பெற்றுக் கொள்வதற்கும் இத் திறமுறைத்திட்டத்தை உரிய வரிசை அமைச்சுக்களின் ஊடாக நிறைவேற்றி கொள்வதற்கும் உலக உணவு நிகழ்ச்சித்திட்டதுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.