• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சார்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- இலஞ்ச அல்லது ஊழல் தொடர்பிலான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவையின் கொள்கை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, இதன்கீழ் 1954 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இலஞ்ச சட்டத்தை திருத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலஞ்ச சட்டம் மற்றும் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வௌிப்படுத்தல் சட்டம் என்பவற்றின் கீழான குற்றங்கள் சம்பந்தமாக வழக்கு தொடுக்கும் அதிகாரம் 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் 156 அ(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடு ஒன்று சம்பந்தமாக தன்னாள் அல்லது வேறு ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாடொன்றின் மீது புலனாய்வினை மேற்கொள்ளும் அத்துடன் வழக்கு தொடுக்கும் அதிகாரம் இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு கையளித்தல் உட்பட இலங்கை ஒருதரப்பாகவுள்ள ஊழல் எதிர்ப்பு சருவதேச சமவாயத்தை நாட்டில் நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்தலும் வேண்டும்.

இதன் பொருட்டு 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்குப் பதிலாக இந்த ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்தி சுயாதீன நிறுவனமொன்றாக தாபிப்பதற்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கமைவாக, இந்த நோக்கம் சார்பில் புதிய சட்டமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.