• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை தாபித்தல்
- 1996 ஆம் ஆண்டில் தேசிய பல்கலைக்கழகமொன்றாக தாபிக்கப்பட்ட சப்பிரகமுவ பல்கலைக்கழகம் தற்போது 7 பீடங்களைக் கொண்டுள்ள பல்கலைக்கழகமொன்றாகும். மருத்துவ கல்வியினை விரிவுப் படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் வயம்ப, மொரட்டுவை, சப்பிரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களை ஆரம்பிப்பதற்கு 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 1,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 75 மருத்துவ மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்து சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ பீடத்துக்கு கட்டமொன்றை நிருமாணிக்கும் பணிகள் 2019 ஆம் ஆண்டிலே ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதுவரை இந்த பீடத்தின் பணிகளை நடாத்தி செல்வதற்கு கட்டட வசதிகளை பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது.

இதற்கமைவாக, இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தும் நோக்கில் இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் பட்டுஹேன பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கணக்காய்வாளர் அதிபதி திணைக்களத்திற்கு சொந்தமான கட்டட தொகுதியையும் காணியையும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு சட்டபூர்வமாக உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டு முன்னாள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது இந்த விடயத்திற்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களின் உடன்பாட்டினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.