• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இணைய பாதுகாப்பு பற்றிய சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
- இணைய குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளமை தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பம் மற்றும் இணையத்தின் மேம்பாட்டிற்கு பாதகமான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இலங்கை இந்த பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதோடு, இணைய பாதுகாப்பு பற்றி செயலாற்றும் தேசிய நிலையமாக "இலங்கை கணனி அவசரகால குழு" (Sri Lanka Computer Emergency Readiness Team - Sri Lanka CERT/CC) செயலாற்றி வருகின்றது. 2005 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இலங்கை கணனி அவசரகால குழுவானது இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையினால் நிருவகிக்கப்படும் நிறுவனமொன்றாகும். சர்வதேச கணனி அவசரகால குழுக்கள் மற்றும் இணைய பாதுகாப்பு பற்றிய ஏனைய நிறுவனங்களுடன் நெருக்கமாக செயலாற்றி இலங்கையிலுள்ள அரசாங்க நிறுவனங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், நீதி மன்றங்கள், பாதுகாப்பு, வங்கி மற்றும் நிதிச் சேவை துறைகள் உட்பட தனியார் துறை தரப்பினர்களுக்கு தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழிநுட்பம் சார்ந்த பாதுகாப்பினை வழங்குவது சம்பந்தமான தேசிய மட்ட சேவையொன்று இந்த நிறுவனத்தினூடாக வழங்கப்படுகின்றது.

இணைய பாதுகாப்பு சம்பந்தமாக அரசாங்க நிறுவனங்களினதும் பொது மக்களினதும் கோரிக்கை அதிகரித்து வருகின்றமையினால் இலங்கை கணனி அவசரகால குழுவின் பணிகளினதும் செயற்பாடுகளினதும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்த செயற்பாட்டினை தொடர்ச்சியாக நடாத்தி செல்வதற்கும் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்குமாக இந்த குழுவை தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் கொண்டுவரும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.