• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்ளல்
- திண்மக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கில் இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர பிரதேசத்தினுள் சேரும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு புத்தளம் அறுவக்காலு பிரதேசத்தில் திண்மக்கழிவு இடப்படும் பிரதேசமொன்றை நிருமாணித்தல், தற்போது செயற்படுத்தப்படும் முத்துராஜவெல சேதன பசளை தயாரித்தல் நிலையத்தை விரிவுபடுத்துதல், தற்போது பயன்படுத்தப்படாத திறந்த கழிவு இடப்படும் இடங்களில் நிலங்களை நிலைப்படுத்தி விருத்தி செய்தல் என்பனவும் இந்தக் கருத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினாலும் செயற்படுத்தப்படும் இந்தக் கருத்திட் டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த செலவு 274 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இந்த செலவிலிருந்து 115 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக உலக வங்கியின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச வங்கியுடன் கடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.