• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சோமாலியா கடற்பிராந்தியத்தில் கடற் கொள்ளையை இல்லாதொழிப்ப தற்கான கடல் சார்ந்த செயற்பாடுகள் தொடர்புபட்ட செயலகத்தை இலங்கையில் தாபித்தல்
- சோமாலியாவுக்கு அண்மையில் இந்துசமுத்திர வலயத்தினுள் கடற்கொள்ளையர்களினால் வணிகக் கப்பல்களை கடத்தும் பல சம்பவங்கள் 2005 ஆம் ஆண்டிலிருந்து அறிக்கையிடப்பட்டு வருகின்றதோடு, 2010 ஆம் ஆண்டு இத்தகைய சம்பவங்கள் ஆகக்கூடுதலாக அறிக்கையிடப்பட்ட ஆண்டாகும். இது சுதந்திரமான கடல் வர்த்தகத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் கடும் தாக்கத்தை செலுத்தியது. சோமலியாவுக்கு அண்மைய கடற்பிராந்தியத்தில் கடற்படையினரை ஈடுபடுத்துதல், வணிக கப்பல்களுக்கு ஆயுதமேதிய பாதுகாவலர்களை ஈடுபடுத்துதல் போன்ற செயற்பாடுகளினால் இந்த கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தற்போது குறைவடைந்துள்ளது. ஆயினும், தடுப்பு நடவடிக்கைகளாக கடற்கொள்ளையர் களுக்கு எதிராக போராடும் ஆற்றலை மேம்படுத்துவதும் இது சம்பந்தமாக வலய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பினை அதிகரித்துக் கொள்வதும் அத்தியாவசியமானதாகும்.

இதற்கான சருவதேச பொறிமுறையொன்றாக சோமாலியா கடற்பிராந்தியத்தில் கடற் கொள்ளையை இல்லாதொழிப்பதற்கான தொடர்புக் குழுவானது (The Contact Group on Piracy off the Coast of Somalia) 2009 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, இலங்கை ஆரம்பத்திலிருந்தே இதன் உறுப்பு நாடாகும். இந்த குழுவின் கடல்சார்ந்த செயற்பாடுகள் தொடர்புபட்ட செயற்குழுவின் செயலகத்தை இலங்கையில் தாபிப்பதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளதோடு, அதற்கான ஆற்றலும் அனுபவமும் இலங்கை கடற்படையிடம் உள்ளது. இதற்கமைவாக, இதன் பொருட்டு முறையான கோரிக்கையொன்றை சோமாலியா கடற்பிராந்தியத்தில் கடற் கொள்ளையை இல்லாதொழிப்பதற்கான தொடர்புக் குழுவுக்கு முன்வைக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.