• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் கீழ் நான்காம் சுற்று தீர்வை சலுகையினை நடைமுறைப்படுத்துதல்
- பங்களாதேஷ், சீனா, இந்தியா, லாவோஸ், தென்கொரியா மற்றும் இலங்கை ஆகிய ஆறு உறுப்பு நாடுகளைக் கொண்ட வலய ஒத்துழைப்பு சமவாயமொன்றான (இதற்கு முன்னர் பாங்கொக் சமவாயமென அழைக்கப்பட்ட) ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கை உலகில் துரிதமாக வளர்ச்சியடைந்த சந்தையினைக் கொண்ட இரண்டு நாடுகளான சீனாவும் இந்தியாவும் உறுப்புரிமையைக் கொண்ட ஒரே செயற்பாட்டு வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த வர்த்தக உடன்படிக்கையின் கீழ் 1990 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை தெரிவு செய்யப்பட்ட வர்த்தகப் பொருட்களுக்கு மூன்று சுற்று தீர்வை சலுகைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக இலங்கை 442 பொருட்களுக்கு தீர்வை சலுகையினை வழங்கியுள்ளது.

இதன் நான்காம் சுற்று கலந்துரையாடலின் கீழ் அரசாங்க வருமானத்திற்கும் உள்நாட்டு கைத்தொழிலுக்கும் பாதிப்பேற்படாத வகையில் மேலும் 143 வர்த்தகப் பொருட்களுக்கு தீர்வை சலுகையினை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. நான்காம் சுற்று தீர்வை சலுகையானது 2018 சனவரி மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் நடைமுறைப்படுத்து வதற்கு சகல உறுப்பு நாடுகளும் உடன்பாடு தெரிவித்துள்ளன. இதற்கமைவாக, உரிய 143 பொருட்களுக்கு இலங்கை உடன்பட்டுள்ளவாறு ஆசிய பசுபிக் வர்த்தக உடன்படிக்கையின் கீழ் நான்காம் சுற்று தீர்வைச் சலுகையினை 2018 சனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்காக 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான காப்புறுதி சட்டத்தின் கீழ் கட்டளையொன்றை வௌியிட்டு அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.