• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி இடப்படும் துறை மற்றும் சாம்பல் இடப்படும் துறை என்பவற்றைச் சுற்றி காற்றுப்புகாமல் மறைப்பொன்றை நிருமாணித்தல்
- புத்தளம் லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார பிறப்பாக்கத்திற்கான வருடாந்த நிலக்கரி தேவைப்பாடு கிட்டத்தட்ட 2.4 மில்லியன் மெற்றிக் தொன் ஆகும். கப்பல்களிலிருந்து இறங்கு துறைக்கு நிலக்கரி இறக்கப்பட்டு இடநகர்த்தப்படும் போதும் எரிந்த நிலக்கரி சாம்பலை களஞ்சியப்படுத்தும் போதும் தூசு உருவாகின்றது. சுற்றுப்புறத்தில் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு கூடிய அசௌகரியத்தை இது உருவாக்குகின்றது. 450 மீற்றர் நீளம் கொண்டதும் 15 மீற்றர் உயரம் கொண்டதுமான காற்றுப்புகாத மறைப்பொன்று நிலக்கரி களஞ்சிய நில முற்றத்தின் கரையோர எல்லைகளில் ஏற்கனவே நிருமாணிக்கப்பட்ட போதிலும் கடும்காற்று காலப்பகுதிகளின் போது முழுப்பிரதேசத்தையும் மூடி பாதுகாப்பதற்கு இது போதாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காற்று புகாத மறைப்பை இதேபோன்று சாம்பல் நிலமுற்றத்தை மூடி பாதுகாக்கும் பொருட்டு விஸ்தரிக்கும் தேவைப்பாடும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆதலால், நிலக்கரி நிலமுற்ற மற்றும் சாம்பல் நிலமுற்றம் ஆகியவற்றை முழுமையாக மூடிப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றைச் சுற்றி லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் தற்போதுள்ள காற்றுப்புகாத மறைப்பை விஸ்தரிப்பதற்கு ஒப்பந்தக்காரரொருவரை தெரிவு செய்யும் பொருட்டு விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இந்த ஒப்பந்தத்தை 723.7 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு Laugfs Engineering (Pvt.) Ltd நிறுவனம் மற்றும் Sanken Construction (Pvt.) Ltd நிறுவனம் ஆகியவற்றுக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.