• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடைமுறையிலுள்ள விசா வழங்கும் முறையை முறைப்படுத்துதலும் இற்றைப்படுத்துதலும்
- இலங்கையின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு உள்நாட்டு வௌிநாட்டு முதலீடுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒருங்கிணைவாக நடைமுறையிலுள்ள விசா வழங்கும் வழிமுறையை முறைப்படுத்தி இற்றைப்படுத்துவதற்கு முன்மொழியப் பட்டுள்ளது. தகைமை கொண்ட வௌிநாட்டவர்களின் கோரிக்கையின் பேரில் தற்போது சுற்றுலா விசா (Visit Visa), வதிவிட விசா (Residence Visa), இடைத்தங்கல் விசா (Transit Visa) ஆகிய விசா வகைகள் வழங்கப்படுகின்றன. நடைமுறையிலுள்ள விசா வகைகள் மற்றும் அதற்காக அறவிடப்படும் கட்டணங்களை திருத்துவதற்கும் தற்போது இலங்கை ரூபாவில் அறவிடப்படும் விசா கட்டணத்தை அமெரிக்க டொலர்களில் அறவிடுவதற்கும் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பின்வரும் பிரிவுகளையும் விசா வழங்கும் வழிமுறையில் சேர்த்து 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் 14 ஆம் பிரிவையும் உரிய ஒழுங்குவிதிகளையும் பொருத்தமானவாறு திருத்தும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* இலங்கை முதலீட்டு சபையின் கீழான துறைகளில் முதலீட்டாளர்களுக்குரிய / ஊழியர்களுக்குரிய வதிவிட விசாவினை சிபாரிசு செய்யும் அதிகாரத்தை முதலீட்டு சபை உரியதாகும் அமைச்சின் செயலாளருக்கு கையளித்தல்.

* செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ள வௌிநாட்டவர்களிட மிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 ஐக்கிய அமெரிக்க டொலர்களை தண்டத் தொகையாக அறிவிடுதல்.

* வௌிநாட்டு மாணவர்களுக்கு முழுக் கல்வி காலப்பகுதி சார்பில் வதிவிட விசா வழங்குதல்.

* இலங்கைக்கு 500,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு கூடுதலான தொகையொன்றை அனுப்பும் வௌிநாட்டவர்களுக்கு பத்து (10) வருட காலம் என்னும் வரையறையின் கீழ் வதிவிட விசா வழங்குதல்.

* இலங்கை பிரசையொருவரை திருமணம் செய்துள்ள வௌிநாட்டு வாழ்க்கைதுணைக்கு ஐந்து (05) வருட காலத்திற்கு வாழ்க்கை துணைக்கான விசா வழங்குதலும் அவர்களுடைய குழந்தைகளுக்கு விசா வழங்குதலும்.

* இலங்கையரான வாழ்க்கைத்துணை மரணித்துள்ள வௌிநாட்டு வாழ்க்கைத்துணைக்கும் அதேபோன்று இலங்கையில் பத்து (10) வருட காலம் தொடர்ச்சியாக வசிக்கும் அல்லது 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுள்ள வௌிநாட்டு துணைகளுக்கும் தொழிலில் ஈடுபடும் பொருட்டு இரண்டு (02) வருட காலத்திற்கு வதிவிட விசா வழங்குதல்.

* இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு இயலாத ஏற்கனவே வௌிநாடொன்றில் குடியுரிமையினைப் பெற்றுள்ள இலங்கையர்களா கவுள்ளவர்களுக்கு நிரந்தர வதிவிட விசாவினை (Paermanent Residence Visa) வழங்குதல்.