• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஷ்ய கூட்டாட்சியினால் இலங்கைத் தேயிலை இறக்குமதியை தடை செய்தல்
- இலங்கையிலிருந்து ரஷ்ய கூட்டாட்சிக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கொள்கலன் பெட்டியொன்றின் பொதியிடல் பொருளில் கப்ரா எனப்படும் வண்டின் (Trogoderma granarium) குடம்பியொன்றை உயிர்நிலையில் கண்டுபிடித்ததன் பின்னர் இலங்கையின் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதியினை 2017-12-18 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக ரஷ்ய கூட்டாட்சி தற்காலிகமாக தடைசெய்தது. இலங்கை அரசாங்கத்தினால் ரஷ்ய கூட்டாட்சிக்கான தேயிலை ஏற்றுமதியானது பெறுமதியில் இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதிகளினதும் 11 சதவீதத்தை உள்ளடக்குகின்றது. ஆதலால், குறித்த வண்டினங்கள் இலங்கையில் மிக அரிதாக உள்ளதனாலும் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக் கொள்கலன் ஒன்றில் அத்தகைய வண்டொன்று காணப்படும் நிகழ்வானது கரிசனையில் கொள்வதற்கு வழக்கத்திற்கு மாறான விடயமொன்றாக உள்ளதனாலும் விசேட கவனம் செலுத்தும் சூழ்நிலையொன்று பற்றி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலை கைத்தொழிலானது ஈட்டியுள்ள உயர் நியமங்கள் மற்றும் தரம் பற்றிய நன்மதிப்பினை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு உடனடியாக செயற்படுவது அவசியமானதாக உள்ளது. அதற்கிணங்க, ரஷ்ய அரசாங்கத்தினால் தூதுக்குழு கூட்டமொன்றுக்கான திகதி வழங்கப்பட்டவுடன் இலங்கைத் தேயிலைச் சபையின் தலைவர், விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் தேசிய தாவர நோய்த்தொற்று தடுப்புச்சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், இலங்கை தேயிலைச் சபையினதும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தினதும் நிபுணர்கள் உள்ளடங்கலாக அவருடைய தலைமையில் தூதுக்குழுவானது குறுங்கால அறிவித்தலின் பேரில் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய தயார் நிலையிலுள்ளதென பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்கள் அமைச்சரவைக்கு அறிவித்தார். மேலும் இலங்கை தேயிலை ஏற்றுமதிகளின் தடையினை நீக்குவதற்கு பொருத்தமான ஏனைய இராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.