• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேதன உணவு உற்பத்தியினை ஊக்குவித்தலும் இந்த உற்பத்திகளுக்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை உருவாக்குதலும்
- இரசாயன பசளை, கிருமிநாசினி, களைக்கொல்லி பாவனையின்றி உற்பத்தி செய்யப்படும் சேதன உணவுப் பொருட்களுக்கு சருவதேச சந்தையில் பாரிய கேள்வி உருவாகிவருகின்றது. ஆதலால், "உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின்" கீழ் சேதன விவசாயத்துடன் தொடர்புபட்ட சுமார் 15,000 விவசாயிகளை தெரிவு செய்து முறையாக சேதன விவசாயத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான அடிப்படை அறிவு மற்றும் பயிற்சியினை வழங்குவதற்கும் அவர்களுடைய உற்பத்திகளை சருவதேச சந்தையில் இடப்படும்போது முக்கியமான சேதன விவசாய உற்பத்தி சான்றிதழை வழங்குவதற்கும் இந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமான நிகழச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று சேதன பசளை பயன்படுத்தி களான் உற்பத்தி செய்வது சம்பந்தமான அனுபவமும் அறிவும் கொண்ட நிபுணத்துவக் குழுவொன்றை சீனாவிலிருந்து கொண்டுவந்து 2,500 இளம் விவசாயிகளுக்கு தொழினுட்ப பயிற்சியினை வழங்குவதற்கும் அவர்களுக்கு சந்தை வாய்ப்பு உட்பட நிதி வசதிகளை செய்வதற்குமான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைய சமூகத்தை கமத்தொழிலுக்கு மீண்டும் கவர்ந்திழுப்பதற்கு நவீன தொழினுட்ப உபகரணங்களையும் கருவிகளையும் பயன்படுத்தும் மாதிரி பண்ணைகள் சிலவற்றை நாட்டில் தாபித்து அதன் மூலம் சுமார் 6,500 இளைஞர்களுக்கு கமத்தொழில் தொழில்முயற்சிக்கான அறிவினை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு உணவு உற்பத்தியை மேம்படுத்துதல் இலங்கையில் கமத்தொழில் உற்பத்தியினை சருவதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்து உயர் வருமான மொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்நாட்டு விவசாயிகளுக்கு வசதியளிக்கும் நோக்கில் மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.