• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை விமான நிலையத்தில் சிவில் விமான செயற்பாட்டுப் பணிகளை விருத்தி செய்தல்
- 1938 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இரத்மலானை விமான நிலையம் வர்த்தக சிவில் விமானநிலைய செயற்பாட்டிற்காக இலங்கையில் தாபிக்கப்பட்ட முதலாவது விமானநிலையமாவதோடு, 1969 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானநிலையம் திறக்கப்படும் வரை உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு விமான செயற்பாடுகள் சார்பிலும் இந்த விமான நிலையமானது பயன்படுத்தப்பட்டது. இந்த விமானநிலையத்தில் 1860 மீற்றர் நீளமும் 45 மீற்றர் அகலமும் கொண்ட ஓடுபாதையொன்று உள்ளதோடு, இதன் விஸ்தீரணம் 460 ஏக்கர்களாகும். கொழும்பு நகரத்திற்கு மிக அண்மையிலுள்ள இந்த விமானநிலையத்தின் சிவில் விமான செயற்பாட்டு பணிகளை மேம்படுத்துவதன் மூலம் பாரிய நன்மையினை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்ற போதிலும் இதன் பணிகளை விரிவுபடுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாமை பிரச்சினையாக காணப்படுகின்றது.

ஆதலால், இந்த விமானநிலையத்தின் ஓடுபாதையின் தெற்குப் பிரதேசத்திலுள்ள 25 ஏக்கர் நிலப்பிரதேசத்தை சிவில் விமானசேவை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமிலுள்ள பிரிவுகளை அதன் உடன்பாட்டுடன் விமான நிலையத்தின் வடக்கு பிரதேசத்தில் மீளமைக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.