• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் காடுகள் தீப்பற்றுவதனை கட்டுப்படுத்துதல்
- காடுகள் சார்ந்த தீபற்றல், நாட்டின் இயற்கை காடுகளின் அளவு குறைவடைவதற்கு தாக்கத்தை செலுத்தியுள்ள பிரதான காரணிகளில் ஒன்றாகும். இலங்கையில் இயற்கையாக காட்டுத்தீ ஏற்படாததோடு, காட்டுப் பிரதேசங்களில் ஏற்படும் தீப்பற்றல் அனைத்தும் மனிதர்களின் கவனக்குறைவால் உருவாகும் தீப்பற்றல் அல்லது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் தீவைப்பு என கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக கால்நடை உரிமை யாளர்களினால் பச்சைப்புல் பெற்றுக் கொள்ளும் நோக்கில் புற்தரைகளுக்கு தீவைப்பதோடு, அவை பரந்து செல்வதனால் காடுகள் தீப்பற்றலுக்கு ஆட்படுகின்றன. வேட்டையாடுபவர்களினால் விலங்குகளை வேட்டையாடுவ தற்காகவும் சேனைப் பயிர்ச்செய்கையாளர்களினால் பயிர்ச்செய்கை நோக்கங்களுக்காவும் காடுகளுக்கு தீவைக்கப்படுகின்றன. புகையிரத பாதை தொழிலாளர்களினால் அவர்களுடைய உபயோகத்துக்காக மேற்கொள்ளப்படும் தீ பற்றவைத்தல், சில கிராம வாசிகளினால் காட்டு எல்லைகளில் அமைந்துள்ள தங்களுடைய காணிகளில் மேற்கொள்ளும் நெருப்பு வைத்தல், வீதிகளில் பயணிப்பவர்களினால் நெருப்புடன் வீசும் சிகரட் துண்டுகள், மற்றும் தீக்குச்சிகள் போன்றவை கவனக்குறைவு காரணமாக தீ பற்றுவதற்கு காரணமாய் அமைவதோடு, சிலர் முற்றுமுழுதாக பொழுதுபோக்கிற்காக காடுகளுக்கு தீ வைக்கின்றனர்.

உலர் வலயத்தில் தீ பற்றுவதன் காரணமாக மண் வௌிப்பட்டு பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் கழுவப்பட்டு செல்தல், இவை அவ்வாறு கழுவப்பட்டு கங்கைகள், கால்வாய்கள் போன்றவை தடைபடுதல், நீர்த்தேக்கங்களில் சேறாக சேர்ந்து அவற்றின் கொள்ளளவு குறைவடைதல், மரங்கள் மற்றும் விலங்குகள் அழிவடைதல், இருப்பிடம் இல்லாமற் போதல், காபன்டையொக்சைட் வளிக்கு விடுவிக்கப்படுதல் போன்ற பிரதிகூலமான பாதிப்புகள் பல இதன் மூலம் உருவாகின்னறன. 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டிலுள்ள காடுகளில் சுமார் 2,945 ஹெக்டயர் தீப்பற்றலுக்கு உட்பட்டுள்ளது.

இதற்கமைவாக காடுகள் தீப்பற்றுவதனை கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் நோக்கில் காடுகளுக்குள் தீப்பற்றி பரவுவதனை தடுக்கும் முகமாக தீப்பாதுகாப்பு நிலப்பிரதேசங்களை உருவாக்குதல், தீப்பற்றல் பரவலாக அறிக்கையிடப்படும் பிரதேசங்களுக்கு அண்மையில் தீயணைப்பு அவசர செயற்பாட்டு பிரிவுகளைத் தாபித்தல், பொதுமக்களுக்கு அறியச் செய்வித்தல் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை நாடுமுழுவதும் தழுவப்படும் விதத்தில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.