• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்திலுள்ள இடைக்கால முனைய கட்டடத்தின் பயணிகள் முனைய ஆற்றலை மேம்படுத்துதல்
- பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தின் பயணிகள் முனைய கட்டடத்தின் வடிவமைப்பு ஆற்றலானது வருடமொன்றுக்கு 6 மில்லியன் விமான பயணிகளைக் கொண்டதாகவுள்ளது. எவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டில் 9.5 மில்லியன் விமான பயணிகள் கையாளப்பட்டுள்ளதுடன், இவ் எண்ணிக்கையானது வருடாந்தம் தொடர்ந்து அதிகரிக்கின்றது. ஆதலால், இந்த விமான நிலையத்தின் பயணிகள் கையாள்கை ஆற்றலை வருடாந்தம் 15 மில்லியனாக அதிகரிக்கும் பொருட்டு, புதிய பயணிகள் முனைவிடமொன்றின் நிருமாணத்திற்கான கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம்முனைவிடத்தின் நிருமாணச் செயற்பாடுகள் அண்ணளவாக 2022 ஆம் ஆண்டளவில் முடிவுறுத்தப்பட முடியுமென்று எதிர்பார்க்கப்படுவதுடன் அக்காலம் வரை விமானப் பயணிகளின் போக்குவரத்து நெருக்கடியினை கருத்திற் கொண்டு தீர்க்கும் பொருட்டு, இடைக்கால தீர்வொன்றாக, பொருத்து பயணிகள் முனைவிடமொன்றை நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நெரிசல் மிக்க நேரங்களில் ஒரு மணித்தியாலத்திற்கு புறப்பட்டுச் செல்லும் 400 பயணிகளுக்குத் தேவையான வசதிகளைக் கொண்ட பொருத்து கட்டடமொன்றின் நிருமாணிப்பை 2018 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவுறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.