• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலர் வலய காடுகளை பாதுகாப்பதற்கு பொதுமக்களது பங்களிப்பை பெற்றுக் கொள்தல்
- 2010 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு தரவுகளுக்கு அமைவாக இலங்கையின் வனப் பிரதேசம் நாட்டின் மொத்த நிலப்பிரதேசத்தின் 29.7 சதவீதமாகும். வன முகாமைத்துவத்துக்காக பொது மக்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்ளும் தேவை வன கொள்கை ஊடாக கண்டறியப்பட்டுள்ளதோடு, இதற்காக பல்வேறுபட்ட திறமுறைகள் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வனப்பகுதியை அதிகரிப்பதனையும் அதன் நிலைபேறான தன்மையை உருவாக்குவதனையும் நோக்காகக் கொண்டு இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும்.

இதற்கமைவாக வன பிரதேசங்களுக்கு அருகாமையில் வசிக்கும் மக்களின் பொருளாதார நிலையினை உயர்த்தி வனங்களை பாதுகாப்பதற்கு 'இலங்கை சமூக வன முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தை' செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் கீழ், இலங்கையில் உலர் மற்றும் இடைநிலை வலயத்துக்குரிய 17 மாவட்டங்களில் வனம் சார்ந்து வசிக்கும் கிராமிய மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட வாழ்வாதாரங் களை அறிமுகப்படுத்துதல், இவற்றுக்குத் தேவையான பயிற்சி உபகரணங்களை வழங்குதல், வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வனப்பாதுகாப்புக்கு பாடசாலை மாணவர்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன் மூலம் 20,000 க்கு மேற்பட்டவர்களுக்கு நேரடி பொருளாதார நலன்கள் கிடைக்கும் என்பதோடு, சுமார் 30,000 ஹெக்டயார் வனாந்தர பிரதேசமும் பாதுகாக்கப்படும். இதற்கமைவாக 261.06 மில்லியன் ரூபா செலவில் 2018 - 2020 காலப்பகுதிக்குள் மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.