• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இளம் பாற்பண்ணை தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்தல்
- இலங்கையர்களின் நுகர்வுக்குத் தேவையான அளவு திரவப்பால் அல்லது பால்மா நாட்டில் உற்பத்தி செய்யப்படாததன் காரணமாக இந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அந்நியசெலாவணி பெருமளவில் வருடாந்தம் செலவு செய்யப்படுகின்றது. ஆதலால், நவீன விஞ்ஞான முறைகளையும் தொழினுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பால் உற்பத்தி அளவினை அதிகரிப்பதற்கான இளம் சமூகத்தின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இளம் பாற்பண்ணை தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பசு வளர்ப்பிற்கு முழு நேரம் ஈடுபடக்கூடிய இளைஞர்களை தெரிவு செய்து தேவையான தொழினுட்ப அறிவு மற்றும் வளங்களை அவர்களுக்கு வழங்கி நாளாந்தம் ஆகக் குறைந்தது 100 லீற்றர் பால் உற்பத்தி செய்யக்கூடிய தொழில் முயற்சியாளர் ஒருவராக உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய 10,000 இளைய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பால் உற்பத்தியை சிறந்த மட்டத்திற்கு கொண்டுவர முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைவாக, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினதும் மத்திய மாகாண சபையினதும் கண்டி மாவட்ட செயலகத்தினதும் ஒத்தாசையினைப் பெற்றுக் கொண்டு, இதன் முன்னோடிக் கருத்திட்டமொன்றை கண்டி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும், அதன் வெற்றியின் மீது ஏனைய பிரதேசங்களிலும் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.