• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இளைஞர்களுக்கு வாக்களிக்கக்கூடியவாறு குறைநிரப்பு தேருநர் இடாப்பொன்றை தயாரிப்பதற்கான சட்டத்தை தயாரித்தல்
- 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, தேருநர்களை பதிவு செய்யும் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதம் 01 ஆம் திகதியன்றுக்கு 18 வயதினைப் பூர்த்தி செய்யும் பிரசைகள் தேருநர்களாக பதிவு செய்யப்படுவர். இதற்காக தேருநர் இடாப்பானது வருடாந்தம் மீளமைக்கப் படுவதோடு, இந்த செயற்பாட்டிற்கு அண்ணளவாக ஆறு (06) மாதங்கள் செல்லும். ஏதேனும் ஆண்டொன்றில் யூன் மாதம் 01 ஆம் திகதி தேருநர் இடாப்பானது மீளமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டு அதனை தயாரித்து உறுதிப்படுத்துவதற்கு முன்னர் அந்த காலப்பகுதிக்குள் ஏதேனும் தேர்தல் ஒன்று நடாத்தப்படவேண்டி வந்தால் அத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கு முன்னைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட தேருநர் இடாப்பானது ஏற்புடைத்தாக்கிக் கொள்ளப்படுகின்றமையினால் தேருநர் இடாப்பில் பதியப்படுவதற்கு தகைமை பெற்ற 18 வயதினைப் பூர்த்தி செய்த புதிய தேருநர்களுக்கு அத்தகைய தேர்தல் ஒன்றின் போது வாக்களிக்கும் வாய்ப்பு இல்லாமற் போகின்றது.

ஆதலால், ஏதேனும் தேருநர் இடாப்பொன்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்த ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் மீளமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் வரையிலான காலப்பகுதிக்குள் 18 வயதினைப் பூர்த்தி செய்பவர்களை அச்சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேருநர் இடாப்பில் தாமதமின்றி சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு குறைநிரப்பு தேருநர் இடாப்பொன்றைத் தயாரிப்பது பொருத்தமானதென தேர்தல் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 1980 ஆம் அண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்யும் சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.