• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடன் உதவி பெற்றுக் கொள்ளல்
- வடமேல், வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களில் கமத்தொழில் நடவடிக்கைகள், குடிநீர் தேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மகாவலி நீரை வழங்கி இந்த நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதனை மேம்படுத்தும் நோக்கில் மகாவலி பாதுகாப்பு மற்றும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டமானது செயற்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மொரகஹகந்த, ஹுருலுவெவ நீர்த்தேக்கங்களை இணைக்கும் 62 கிலோமீற்றர் நீளமான மேல் எலஹெர கால்வாயின் சுரங்க கால்வாயை நிருமாணித்தல், களுகங்கை மற்றும் மொரகஹகந்த நீர்தேக்கங்களை இணைக்கும் சுரங்க கால்வாயை நிருமாணித்தல், மஹகிருள நீர்த்தேக்கம் உட்பட மஹகித்துள் நுழைவு சுரங்கப்பாதையின் மீதி நிருமாணிப்பு வேலைகள் என்பவற்றை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இரண்டாம் கட்டத்திற்கான மொத்த முதலீடு 242 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, இதில் 32 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட பங்களிப்பானது இலங்கை அரசாங்கத்தினால் வகிக்கப்படும். மீதி 210 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதித் தேவையானது ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடந்த தொகையொன்றாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இதற்கமைவாக, இந்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் இந்த வங்கியுடன் உரிய கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.