• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தல்களுக்காக செய்யப்படும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
- மக்களுக்குள்ள இறைமையின் ஒரு அங்கமான வாக்குரிமையை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடாத்துவது அத்தியாவசிய மானதாகும். ஏதேனும் தேர்தலொன்று சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடாத்தப்படுவதற்கு சுயமாக மக்கள் விருப்பினை வௌிப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். ஏதேனும் அரசியல் கட்சியொன்றினால், குழுவொன்றினால் அல்லது அபேட்சகர் ஒருவரினால் மக்களின் வாக்கினைப் பெற்றுக் கொள்வதற்கு கட்டுப்பாடின்றி பெருமளவு நிதி செலவு செய்யுமிடத்து இது மக்கள் விருப்பத்தின்பால் கணிசமான தாக்கத்தினை செலுத்துவதற்கு ஏதுவாய் அமையும்.

இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் மக்கள் அவர்களின் விருப்பத்தை உரிய வகையில் வௌிப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டங்களை அமுல்படுத்தியுள்ளதோடு, தேர்தல்களின் போது சட்டவிரோத வன்முறைகள் அதேபோன்று ஊழல் நடவடிக்கைகளை குறைப்பதற்கும் கூட இத்தகைய கட்டுப்பாடொன்று இருப்பது சாதகமாய் அமையும் என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் 1977 ஆம் ஆண்டிற்கு முன்னர் நிலவிய தேர்தல்களின் போது அபேட்சகர்கள் தேர்தலுக்கான செலவுகள் சம்பந்தமாக அறிக்கைகளை வழங்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போதைய தேர்தல் முறையின் கீழ் அத்தகைய ஏற்பாடுகள் காணப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் சட்டநிபுணர்கள் ஆகியோர்களுடன் கலந்துரை யாடப்பட்டதன் பின்னர் இது சம்பந்தமான ஏற்பாடுகளைச் செய்யும் தேவை பற்றி அடிப்படை ரீதியில் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் அபேட்சகர்களினால் உறப்படும் தேர்தல் செலவுகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் செலவுகள் சார்பில் வரையறைகளை விதிப்பதற்கும் இயலுமாகும் வகையில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கும் புதிதாக சட்டங்களை ஆக்குவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.