• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் உதவி மருத்துவ சேவைகளுடன் கூடிய இருதய கெத்தீட்டர் ஆய்வுகூடமொன்றை அமைத்தல்
- தற்போது, இருதய நோய்களுக்கு உட்பட்டுவரும் மக்கள் தொடர்பிலான ஆபத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. ஆதலால், வைத்தியசாலைகளில் இருதயம் சார்ந்த சிகிச்சை அலகுகளில் வசதிகளை மேம்படுத்தல் அத்தியாவசியமானது. இருதய நோய்களுக்கான நிபுணத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும், ஊவா மாகாணத்திலுள்ள ஒரேயொரு வைத்தியசாலையே பதுளையிலுள்ள மாகாண பொது வைத்தியசாலையாகும். இதன் இருதயவியல் சிகிச்சை நிலையங்களுக்கு வருடாந்தம் கிட்டத்தட்ட 10,000 நோயாளர்கள் வருகை தருவதுடன் அவர்களில் கிட்டத்தட்ட 1,500 பேர் இருதய சிகிச்சை அலகுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில் 1,000 இற்கும் கூடுதலான நோயாளர்களுக்கு நோய் கண்டறிதல் நோக்கங்களுக்காக இருதய சோதிப்பு (Catheterization) தேவைப்படுகின்ற போதிலும் தற்போது வைத்தியசாலையில் கிடைக்கக்கூடிய வசதிகள் அத்தகைய எண்ணிக்கைக்குப் போதுமானதன்று.

ஆதலால், யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் நிதி உதவிக்குள் 698 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட செலவில் பதுளையிலுள்ள மாகாண பொது வைத்தியசாலையில் உரிய சிகிச்சை நிலையம்சார் சிகிச்சை வசதிகளுடன் கூடிய இருதய சோதிப்பு (Catheterization) ஆய்வுகூடமொன்றையும் அதிதீவிர சிகிச்சை அலகு ஒன்றையும் தாபிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.