• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுக சலுகை உடன்படிக்கை
- அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்க - தனியார் பங்குடமையின் கீழ் வர்த்தக ரீதியில் இலாபகரமான நிலைமைக்கு மாற்றுவதை நோக்காகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் China Merchants Port Holdings Company Ltd (CM Port) கம்பனியுடன் சலுகை உடன்படிக்கையொன்று செய்யப்படவுள்ளது. இதற்காக இதற்குமுன்னர் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட உடன்படிக்கையானது உரிய சகல தரப்பினர்களுடன் உசாவுதலைச் செய்து இலங்கை அரசாங்கத்திற்கு மிகச் சாதகமாக மீளத் தயாரிக்கப்பட்டுள்ளது. உத்தேச புதிய சலுகை உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் (இலங்கை துறைமுக அதிகாரசபை) அரசாங்க பங்குடமையாளராகவும் உரிய முதலீட்டுக் கம்பனியானது தனியார் பங்குடமையாளராகவும் தொடர்புபட்ட 02 கம்பனிகளும் இங்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தாபிக்கப்பட்டுள்ளது.

* Hambantota International Port Services Co.(Pvt) Ltd., - (HIPS): அம்பாந்தோட்டை துறைமுக சேவைகள் மற்றும் பொது வசதிகள் முகாமைத்துவத்திற்காக தாபிக்கப்படுவதோடு, இதற்கான மூலதனம் 606 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இந்தக் கம்பனியின் பங்களின் 50.7 சதவீதம் கொண்ட உரிமையானது இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் மீதி 49.3 சதவீதமான உரிமையானது CM Port கம்பனிக்கும் உரியதாகும்.

* Hambantota International Port Group (Pvt) Ltd., - (HIPG): துறைமுகத்தின் தொழிற்பாட்டு சொத்துக்களின் முகாமைத்துவம், மேலதிக அபிவிருத்தி பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கொள்கலன் கையாள்கை உட்பட ஏனைய செயற்பாடுகளை வர்த்தகமயமாக்கும் பொருட்டு தாபிக்கப்படும் 794 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மூலதனத்துடனான இந்தக் கம்பனியின் பங்கு மூலதனமானது தற்போது கொழும்பு துறைமுகத்தின் SAGT அந்தலையினதும் CICT அந்தலையினதும் கையாள்கையில் பங்கு உரிமை பிரிந்துள்ள அதே விதத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 15 சதவீதமும் CM Port கம்பனிக்கு 85 சதவீதமுமாக உரியதாகும்.

இதற்கமைவாக, ஆரம்ப உடன்படிக்கையில் பிரேரிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு 80:20 பங்குகள் பிரிந்து செல்லும் அடிப்படைக்குப் பதிலாக CM Port கம்பனிக்கு 69.55 வீதமும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 30.45 வீதமுமாக மொத்த முதலீட்டின் பங்குரிமையானது திருத்தப்படும்.

உத்தேச உடன்படிக்கையின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தினதும் அதன்கீழான காணிகள் சொந்த உரிமையானது எச்சந்தர்ப்பத்திலும் முதலீட்டுக் கம்பனிக்கு உடைமையாக்கப்பட மாட்டாதென்பதோடு, இலங்கை அரசாங்கத்துடனான பங்குரிமையுடன் கீழ் தாபிக்கப்படும் மேற்போந்த 02 கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படும். இந்த இரண்டு கம்பனிகளினதும் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.

* உடன்படிக்கை அமுல்படுத்தும் திகதியிலிருந்து 70 வருடங்களின் பின்னர்:

CM Port கம்பனி, அதன் துணை தரப்பு அல்லது பங்காளர்களினால் HIPS, HIPG ஆகிய கம்பனிகளில் கொண்டுள்ள பங்குகள் அரசாங்க மதிப்பீட்டாளரினாலும் சுதந்திரமான மதிப்பீட்டாளர் ஒருவரினாலும் தீர்மானிக்கப்படும் நியாயமான பெறுமதிகளுக்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உரிமையுண்டு.

* உடன்படிக்கை அமுல்படுத்தும் திகதியிலிருந்து 80 வருடங்களின் பின்னர்:

HIPG கம்பனியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பங்குரிமையை நூற்றுக்கு 60 மற்றும் HIPS கம்பனியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான பங்குரிமையை நூற்றுக்கு 76.8 என்னும் விதத்தில் CM Port கம்பனி, அதன் துணை தரப்பு அல்லது பங்காளர்களினால் இந்தக் கம்பனிகளில் கொண்டுள்ள பங்குகளை 01 ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட தொகைக்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உரிமையுண்டு.

* உடன்படிக்கை அமுல்படுத்தும் திகதியிலிருந்து 99 வருடங்களின் பின்னர்:

CM Port கம்பனி, அதன் துணை தரப்பு அல்லது பங்காளர்களினால் HIPS, HIPG ஆகிய கம்பனிகளில் கொண்டுள்ள பங்குகளை CM Port கம்பனியினால் 01 ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட தொகைக்கு, இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கையளித்தல் வேண்டும்.

அதேபோன்று யுத்த செயற்பாடுகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதனை தடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் உத்தேச உடன்படிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, துறைமுகத்தின் பாதுகாப்பு சம்பந்தமான முழுமையான பொறுப்பும் அதிகாரமும் இலங்கை அரசாங்கத்திற்கே உரியதாகும்.

இதற்கமைவாக, துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உத்தேச சலுகை உடன்படிக்கை சம்பந்தமாக அக்கறை கொண்டுள்ள தரப்பினர்களிடமிருந்து மேலும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கு முன்வைக்கப்படும் பிரேரிப்புகள் இருப்பின் அதற்கமைவாக தேவையான திருத்தங்களைச் செய்வதற்கும் அதன் பின்னர் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.