• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய ரீதியிலான வழிகாட்டல்கள்
- தொழில்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதோடு, பிள்ளைகளை பராமரிக்கும் பொருட்டு செயற்படும் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. தற்போது பல்வேறுபட்ட அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களினால் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் நடாத்திச் செல்லப்படுவதோடு, அவற்றின் செயற்பாடு சம்பந்தமாக தேசிய மட்டத்திலான தரங்களும் அதேபோன்று முறையான ஒழுங்குறுத்துகையைும் உருவாக்கும் தேவை எழுந்துள்ளது.

இதற்கமைவாக, உரிய சகல தரப்பினர்களினதும் நிபுணர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு, 'இலங்கையில் சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய ரீதியிலான வழிகாட்டல்கள்' என்பது தயாரிக்கப்பட்டுள்ளது. உத்தேச வழிகாட்டல்கள் மூலம் சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கைமுறை, பேணப்பட வேண்டிய தரங்கள் மற்றும் மேற்பார்வை பொறிமுறை தொடர்பிலான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுவதோடு, மாகாண சிறுவர் நன்னடத்தை, பாதுகாவல் திணைக்களத்தின் கீழ் இந்த பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உத்தேச வழிகாட்டல் கோவைக்கு ஒருங்கிணைவாக தேசிய தொழிற் தகைமை 4 ஆம் மட்டத்திற்கான (NVQ Level 4) சிறுவர் பராமரிப்பு பாடநெறியொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 'இலங்கையில் சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய ரீதியிலான வழிகாட்டல்கள்' என்பதை அங்கீகரிப்பதற்கும் இந்த வழிகாட்டல்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினதும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினதும் மேற்பார்வையின் கீழ் உரிய செயற்பாட்டு திட்டமொன்றின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.