• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமாஓயா பல்பணி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையான நிலைமைக்கு உடனடியாக மாற்று வழிகளை செய்தல்
– உமாஓயா பல்பணி அபிவிருத்தி திட்டத்தின் சுரங்க வழி நிருமாணிப்பு காரணமாக பிரதேசவாழ் மக்கள் முகங் கொடுக்க வேண்டி வந்துள்ள கஷ்டங்கள் பற்றி ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று 2017‑06‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டது.

இதற்கமைவாக, உரிய பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், உமாஓயா பல்பணி அபிவிருத்தி திட்டத்தின் சுரங்க வழி நிருமாணிப்பு காரணமாக பிரதேசவாழ் மக்கள் முகங் கொடுக்க வேண்டி வந்துள்ள கஷ்டங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பின்வரும் சிபாரிசுகளை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு இந்த அமைச்சரவை உபகுழுவின் தலைவராக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* முறையான ஆய்வொன்றைச் செய்து பொருத்தமான இடத்தில் பாரிய அளவிலான ஆறு நிலக்கீழ் கிணறுகளை நிருமாணித்தல்.

* தற்போது நீர்தாங்கிகள் வழங்கப்படாத குடும்பங்கள் இருப்பின் அந்தக் குடும்ப அலகு சார்பில் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் நீர்தாங்கிகளை வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.

* நீர்விநியோக செயற்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சிடமுள்ள இருபது டிரக்டர் பௌசர்களை பதுளை மாவட்ட செயலாளருக்கு துரிதமாக விடுவித்தல்.

* சேதமடைந்த சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துதல்.

* தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பிரிவொன்றைத் தாபித்து சேவைகளை மிக வினைத்திறனாக்குதல்.

* பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் கிராமிய வீதி முறைமைகளை புனரமைக்கும் பொருட்டு 100 மில்லியன் ரூபாவை மாகாண சபைக்கு துரிதமாக விடுவித்தல்.

* நிவாரண பணிகளை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள 'மக்கள் நிவாரண செயலகத்தை' பலப்படுத்துதல்.

* நிவாரண பணிகளின் முன்னேற்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒருதடவையும் மாதாந்தமும் மீளாய்வு செய்தல்.

* உத்தேச பண்டாரவலை பாரிய நீர் திட்டத்தின் நிருமாணிப்பினை துரிதப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்குதல்.

* பாதிக்கப்பட்டுள்ள சிறிய குளங்களை புனரமைப்பதற்காக 100 மில்லியன் ரூாபவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை விடுவித்தல்.

* மீள் குடியமர்த்துவதற்காக இனங்காணப்பட்டுள்ள காணிகளில் உரிமையை பண்டாரவலை பிரதேச செயலாளர் ஊடாக உரிய குடும்பங்களுக்கு துரிதமாக வழங்குதல்.

* பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை துரிதமாக திருத்த வேலைகளைச் செய்து பழைய நிலைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளை வழங்குதல்.

* பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களினால் பெறப்பட்டுள்ள வீட்டுக்கடன்கள் மற்றும் விவசாய கடன்கள் என்பவற்றை தவணைகளாகச் செலுத்துவதற்கு இரண்டு வருட சலுகை காலத்தை வழங்குதல்.

* பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட மாற்று வாழ்வாதார அபிவிருத்தி திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துதல்.

* சுரங்கவழியிலுள்ள நீர் கசிவை மூடுவதற்கு ஈரான் கம்பனியினால் நடவடிக்கை எடுத்தல்.

* கருத்திட்டத்தின் எதிர்கால துளையிடல் பணிகள் சருவதேச நிபுணர்களின் சிபாரிசு உட்பட உள்நாட்டு நிபுணர்கள் குழுவினால் வழங்கப்படும் சிபாரிசுகள் மீது மாத்திரம் மீண்டும் பரிசீலனை செய்தல்.