• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் முறையற்ற விதத்தில் திண்மக் கழிவுகள் இடப்படுதலை தடுத்தலும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துதலும் சம்பந்தமாக அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் முறையற்ற விதத்தில் திண்மக் கழிவுகள் இடப்படுவதனால் எழுந்துள்ள பிரச்சினைகளை குறைப்பதற்கு செயற்பாட்டு பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முப்படை, பொலிஸ் அடங்கலாக ஏனைய நிறுவனங்களை இணைத்து செயற்பாட்டு அலுவலகமொன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு நாளாந்தம் கணிசமான அளவில் முறைபாடுகள் கிடைக்கப் பெறுகின்றது. இந்த முறைப்பாடுகளுக்கு அமைவாக கழிவுகள் இடுவதற்கு பொது மக்களிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை யெனவும் விசேடமாக இரவு நேரங்களில் முறையற்றவிதத்தில் கழிவுகள் கூடுதலாக இடப்படுகின்றதெனவும் தெரியவருகின்றது. இதற்கமைவாக, மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் நடாத்தப்பட்ட கூட்டமொன்றில் தீர்மானிக்கப்பட்ட பின்வரும் நடவடிக்கைகளை செயற்படுத்தும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* முறையற்ற விதத்தில் கழிவுகள் இடப்படும் பொது இடங்களை அவதானிப்பதற்காக CCTV கருவிகளை பொருத்துதல், அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் காட்சிகளை செல்லிட தொலைபேசி ஊடாக செயற்பாட்டு பிரிவிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு கண்காணிக்கும் வழிமுறையொன்றைத் தயாரித்தல்.

* கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள சகல நிருமாணிப்பு இடங்களில் குறித்த நிருமாணிப்புகளின் சட்டபூர்வ உரிமையாளர்களினதும் ஒப்பந்தக்காரர்களினதும் ஏனைய உரிய தகவல்களையும் உள்ளடக்கி பெயர் பலகைகள் பொருத்துவதை கட்டாயமாக்குதல்.

* பாடசாலைகள், அரசாங்க நிறுவனங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களில் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏற்ற வகையில் செயலாற்றுபவர்களுக்கு எதிராக அவர்களுடைய தனிப்பட்ட பெயரில் வழங்கு தொடுத்தல்.

* உட்செல்ல முடியாதவாறு பூட்டுபோட்டு மூடியுள்ள வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு உட்சென்று அவற்றை பரிசோதனை செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குதல்.

* செயற்பாட்டு அலகை 24 மணித்தியாலம் முழுவதும் நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான உத்தியோகத்தர்களை இணைத்தல் அத்துடன் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல்.