• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சுகாதார கொள்கை
– நடைமுறையிலுள்ள சுகாதார கொள்கையானது 1996 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒன்றாவதோடு, சுகாதாரத்துறை சார்ந்த தற்போதைய போக்குகளைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, புதிய தேசிய சுகாதாரக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் தேவை எழுந்துள்ளது.

இதற்கமைவாக மூன்று வருட (2014-2016) காலப்பகுதிக்குள் சுகாதார சேவையின் சகல துறைகளையும் சேர்ந்த தொழில்சார் நிபுணர்களின், தொழில் சார்பாளர்களின் மற்றும் தொழில்சார் நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய தேசிய சுகாதாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் போது 'உலகளாவிய சுகாதாரத்தை தழுவுதல்' என்னும் எண்ணக்கரு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நோயாளர்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தின் கடமையினை உறுதிப்படுத்தி நோயாளிகள் மற்றும் மக்களை மையப்படுத்திய சுகாதார கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. இதற்கமைவாக, பின்வரும் பிரதான கொள்கை செயற்பாடுகளை இனங்கண்டு, 2016-2025 பத்து வருட காலத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த 'தேசிய சுகாதார கொள்கைக்கு' அங்கீகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நோய்தடுப்பு சுகாதார நோக்கத்தை அடையும் பொருட்டு சேவைகளை வழங்குவதனைப் பலப்படுத்துதல்.

* இலங்கை பிரசைகள் அனைவருக்கும் உயர் தரம் வாய்ந்த, பொருத்தமான அத்துடன் சகலருக்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய சிகிச்சை சேவையொன்றை வழங்குதல்.

* தரம்வாய்ந்த புனர்வாழ்வு சிகிச்சை சேவையொன்றுக்கான நியாயமான அணுகுகையை மேம்படுத்துதல்.

* தொடர்ச்சியான சுகாதார சேவையினை வழங்கும் வழிமுறையினைப் பலப்படுத்துவதற்கு சேவை வழங்கல் தரவுகள் மீது அடிப்படையாய் அமைந்த திட்ட வழிமுறையொன்றைத் தாபித்தல்.

* நோயாளர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பணம் செலவு செய்வதற்கு நேரிடும் சந்தர்ப்பங்களை குறைக்கும் பொருட்டு புதிய திறமுறைகளை அபிவிருத்தி செய்தலும் நிதிசார் பிரச்சினைகளைக் குறைத்தலும்.

* மனிதவள முகாமைத்துவம் அடங்கலாக மிகச் சிறந்த மீளமைப்பின் மூலம் பரந்துபட்ட சுகாதார முறைமையொன்றை பாதுகாத்தல்.

* சகல சுகாதார சிகிச்சை சேவைகளை வழங்குபவர்களுடன் திறமுறை ரீதியில் ஒருங்கிணைப்பினைக் கட்டியெழுப்பிக் கொள்ளல்.