• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலித்தீன் மூலம் ஏற்பட்டுள்ள சுற்றடால் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு பொலித்தீன் பாவனையை உரியமுறையில் முகாமித்தல்
– பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகளை குறைப்பதற்காக பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை உரிய முறையில் முகாமிக்கும் நோக்கில் தேசிய கொள்கையொன்றையும் செயற்பாட்டுத் திட்டமொன்றையும் தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு 2016 செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது, அவ்வாறு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பின்வரும் குறுகியகால, நடுத்தவணைக்கால, நீண்டகால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறுகியகால செயற்பாடுகள் :

* தேசிய, மத, சமூக, கலாசார மற்றும் அரசியல் வைபவங்கள் அடங்கலாக சகல வைபவங்களுக்கான சோடனைகளின் போது பொலித்தீன் பாவனையை தடைசெய்தல்.

* 20 மைக்ரோனுக்கு சமனான அல்லது அதற்கு குறைந்த கன அளவு கொண்ட பொலித்தீன் பாவனையை, விற்பனையை, உற்பத்தியை தடை செய்து தற்போது வௌிப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துதல்.

* அத்தியாவசிய நோக்கங்களுக்காக 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன் பாவனை சார்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அங்கீகாரத்தின் மீது மாத்திரம் அனுமதியளித்தல்.

* உணவு பொதியிடலுக்காக தற்போது பயன்படுத்தப்படும் "Lunch Sheets” உள்நாட்டு பாவனைக்காக இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் என்பவற்றை தடைசெய்தல்.

* பொலிஸ்டைரின் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் உணவு பொதியிடல் பெட்டிகள், பிளாஸ்டிக் பீங்கான் கோப்பைகள் மற்றும் கரண்டிகள் என்பவற்றின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனையை தடைசெய்தல்.

* பொலித்தீன் மூலம் தயாரிக்கப்பட்ட பைகளில் இடப்பட்டு தயாரிக்கப்பட்ட அல்லது சமைத்த உணவு விற்பனையை தடைசெய்தல்.

* பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக கடதாசி, ஓலை, துணி போன்ற சுற்றாடல் நடபுறவுமிக்க பைகளை வழங்குதல் உட்பட அத்தகைய பைகளை உற்பத்தி செய்யும் போது உயிரியல் மாற்றத்திற்கு உள்ளாவதன் மூலம் உக்கிப் போகக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்படுத்துகையை மேம்படுத்துதல்.

* வெற்று நிலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளை எரிப்பதனை தடைசெய்தல்.

* உயிரியல் மாற்றத்திற்கு உள்ளாகும் பிளாஸ்டிக் மூலப் பொருட்களை அறிமுகப்படுத்துதலும் விளம்பரப்படுத்துதலும்.

நடுத்தவணைகால செயற்பாடுகள்:

* உயிரியல் மாற்றத்திற்கு உள்ளாகும் பிளாஸ்டிக் மூலப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைளை மேற்கொள்வதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்யும் போது வரிச்சலுகை வழங்குதல்.

* பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதியின் போது 15% செஸ் வரியினை அறவிடுதல்.

நீண்டகால செயற்பாடுகள்:

* மீள் சுழற்சிக்குட்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடைசெய்தல்.