• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பளை ஆதார வைத்தியசாலையின் (போதனா) விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிருமாணித்தலும் விபத்து காவறை, சத்திர சிகிச்சைக்கூடம் தீவிர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றை நிருமாணித்தலும்
- சுமார் 350 படுக்கைகளைக் கொண்ட கம்பளை ஆதார (போதனா) வைத்தியசாலை மத்திய மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலை ஒன்றாவதோடு, அது பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களின் போதனா வைத்தியசாலையாகவும் செயற்படுகின்றது. ஆதலால் விபத்து காரணமாக நிகழும் மரணம் மற்றும் அங்கவீனமுறல் என்பவற்றை தடுப்பதற்கும் நோயாளிகளில் அதிக எண்ணிக்கையினருக்கு உயர்தரம் வாய்ந்த சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் இந்த வைத்தியசாலையின் தீவிர கணிகாணிப்பு பிரிவு, விபத்து காவறை மற்றும் சத்திர சிகிச்சைக்கூட வசதிகளை விருத்தி செய்ய வேண்டியுள்ளது. இதற்கமைவாக இந்த ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிருமாணிப்பதற்கும் விபத்து காவறை, சத்திர சிகிச்சைக்கூடம் தீவிர கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றை நிருமாணிப்பதற்கும் பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, இதற்காக முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள M/s Electro Metal Pressings (Pvt) Ltd., கம்பனிக்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.