• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தை (262 ஆவது அத்தியாயம்) திருத்துதல்
- சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட வரைவானது அமைச்சரவை உபகுழுவொன்றினால் ஆராயப்பட்டிருந்ததன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட சமர்ப்பிப்புக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கான (262 ஆவது அத்தியாயம்) திருத்தத்தின் இறுதி வரைவானது, கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு திருத்தச் சட்டத்தினை வரைவதற்கு அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு இணங்க, தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 75 ஆம் உறுப்புரையின் (அ) ஆம் உபபந்திக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை ஒன்றின் மூலம் வரைவு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளனவென்பதை சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளதன் விளைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் உத்தியோகத்தர்களுடனும் மற்றும் சட்டவரைநர் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் ஒன்றுக்குப் பின்னர், பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏதுவாக இச்சட்டமூலம் மீள வரையப்பட்டுள்ளது.

பல்வகை - உறுப்பினர் வட்டாரங்களுக்கான வேட்பாளர்களை முன்னளிப்பதற்கான பொறிமுறை குறித்து தேர்தல்கள் திணைக்களத்தினால் செய்யப்பட்ட ஆலோசனைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சட்டவரைநரினால் மேலதிக திருத்தங்கள் வரையப்படும் என்பதுடன் அத்தகைய திருத்தங்களானவை பாராளுமன்றத்தில் இச்சட்டமூலத்தின் குழுநிலை சந்தர்ப்பத்தில் வரைவு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும். அதற்கிணங்க, வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் அத்துடன் தேர்தல்கள் திணைக்களத்தினால் செய்யப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சட்டவரைநரினால் செய்யப்பட்ட மேலதிக திருத்தங்களை பாராளுமன்றத்தில் இச்சட்டமூலத்தின் குழுநிலை சந்தர்ப்பத்தில் உள்ளடக்கும் பொருட்டும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.