• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவைத் திருத்துதல் (சமாதான நீதவான்களை நியமித்தல்)
- 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவின் ஏற்பாட்டிற்கிணங்க, இந்த நாட்டின் யாதாயினுமொரு குறித்த வலயம், மாவட்டம் அல்லது பிரிவில் சமாதான நீதவான்களை நியமிப்பதற்கான அதிகாரமானது நீதி என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சமாதான நீதவான்கள் தமது சேவைகளை இலகுவாக வழங்குவதற்கு ஏதுவாக அவர்களின் வதிவிட பிரதேசங்களை கவனத்தில் கொண்டு யாதாயினுமொரு குறித்த நீதித்துறை வலயம், மாவட்டம் அல்லது பிரிவில் சேவையாற்றும் பொருட்டு அவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். எவ்வாறாயினும், காலத்திற்குக் காலம் நீதித்துறை வலயங்கள் மாற்றப்பட்டு வருவதன் காரணமாக, தமக்குரிய நீதித்துறை வலயங்களை இனங்கண்டு கொள்வதில் நடைமுறை ரீதியில் அவர்களுக்கு கடினமாகவுள்ளது என்பதை சமாதான நீதவான்கள் நீதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு, சமாதான நீதவான்களை யாதாயினுமொரு நீதித்துறை வலயத்திற்கு அல்லது பிரிவிற்கு நியமிப்பதற்கு பதிலாக நிர்வாக மாவட்டங்களுக்கு சமாதான நீதவான்களை நியமித்தலானது கூடுதல் நடைமுறைச் சாத்தியமாக இருக்குமென்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், தேவைப்படக்கூடியவாறு அத்தகைய சட்டவாக்கத்தினை வழங்கும் நோக்குடன், 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவை திருத்துவதற்கென சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.