• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக பேரூந்து சேவைகளை விருத்தி செய்தல்
- பாராளுமன்ற வீதி, இராஜகிரிய சந்தியிலிருந்து ஆயுள்வேத சந்திவரை பேரூந்து முன்னுரிமை சாலைவரிசையினை குறித்தொதுக்கும் முன்னோடிக் கருத்திட்டமொன்று கொரிய சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினதும் இந்த துறையின் தொழில்சார் நிபுணர்களினதும் ஒத்துழைப்புடன் 2017 மார்ச் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, இது வாகன நெரிசலை குறைப்பதற்கு வெற்றிகரமான தீர்வொன்றாக இந்த பரீட்சார்த்த நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மிகச் சிறந்த பொது போக்குவரத்து சேவையொன்றை வழங்கும் நோக்கில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள இலகு புகையிரத முறைமை மற்றும் மின்சார புகையிரதம் போன்ற கருத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு மேலும் பல வருடங்கள் செல்லக்கூடுமென்பதனால் துரிதமாக தீர்வொன்று வழங்கப்பட வேண்டிய வாகன நெரிசலுக்கு முகங்கொடுப்பதற்கு பின்வருமாறு "பேரூந்துகளுக்கான முன்னுரிமை சாலைவரிசை எண்ணக்கருவை" மேலும் விரிவுபடுத்துவதற்கும் பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதற்கு நடுத்தர வகுப்பினரை ஈர்ப்பதற்கு பொது போக்குவரத்து சேவையின் தரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* .உச்சமாக பயன்படுத்தும் நேரங்களில் பின்வரும் வீதிகளில் பேரூந்துகளுக்கான முன்னுரிமை சாலை வரிசைகளை நடைமுறைப்படுத்துவதற்கும்:

- காலி வீதியில் மொரட்டுவையிலிருந்து இரத்மலான வரையும் வௌ்ளவத்தை பாலத்திலிருந்து கொள்ளுப்பிட்டிய வரை கொழும்பு நோக்கி செல்லும் பேரூந்து முன்னுரிமை சாலை வரிசை;

- பாராளுமன்ற வீதியில் பாராளுமன்ற சந்தியிலிருந்து இராஜகிரிய, பொரல்லை, மருதானை, மற்றும் புறக்கோட்டை ஊடாக கொழும்பு கோட்டை வரை கொழும்பு நோக்கி செல்லும் பேரூந்து முன்னுரிமை சாலை வரிசை;

- கொழும்பு சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தையில் விமானப்படை சுற்று வட்டத்திலிருந்து புறக்கோட்டை வரை கொழும்பு நோக்கி செல்லும் பேரூந்து முன்னுரிமை சாலை வரிசை;

- தும்முல்ல சந்தியிலிருந்து நூதனசாலை சந்திவரை கொழும்பு நோக்கி செல்லும் பேரூந்து முன்னுரிமை சாலை வரிசை;

- கண் சிகிச்சை வைத்தியசாலை சுற்று வட்டத்திலிருந்து தும்முல்ல சந்திவரை கொழும்புக்கு வௌியே செல்லும் பேரூந்து முன்னுரிமை சாலை வரிசை.

* சாதாரண பேரூந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வதற்காக வரிச் சலுகைகள் வழங்குவதற்குப் பதிலாக சலுகை கடன் திட்டத்தின் மூலம் தரை நோக்கிய குளிரூட்டப்பட்ட பேரூந்து வண்டிகள் இறக்குமதி செய்வதனை ஊக்குவித்தல்.

* பேரூந்துகளில் மின்னணு அட்டைகள் மூலம் கொடுப்பனவு வசதிகளுடனான பொது நுழைவுச் சீட்டு முறைமையொன்றை தயாரித்தல்.

* முச்சக்கர வண்டி / வாடகை வாகன தரிப்பிட வசதிகளை விருத்தி செய்தல்.