• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-04-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுத்திரம் சார் மீட்புக்கான ஒருங்கிணைப்பு பணிகளை விருத்தி செய்தல்
- சருவதேச சிவில் விமானசேவைகள் சமவாயம், சமுத்திரம் சார் உயிர் பாதுகாப்பு சமவாயம் மற்றும் சமுத்திரம் சார் சட்ட சமவாயம் ஆகிய இலங்கை கைச்சாத்திட்டுள்ள சருவதேச சமவாயங்களுக்கு அமைவாக, இலங்கை கடல் வலயத்தினுள் கடற்றொழில் மற்றும் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது விபத்துக்கு உள்ளாகும் படகுகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு கண்டு பிடித்தல் மற்றும் மீட்பு சேவைகளை வழங்குவதற்காக "சமுத்திரம் சார் மீட்புக்கான ஒருங்கிணைப்பு நிலையமொன்றை" பேணுவது அத்தியாவசியமானதாகும். தற்போது இந்த பொறுப்பு வணிக கப்பல் செயலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, இந்த செயலகத்தினால் குறித்த பணிகள் இலங்கை கடற்படைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடல் பரப்பிற்குள் விபத்துக்குள்ளாகும் படகுகளுடன் நேரடியான தொடர்புகளை பேணுதல், அத்தகைய படகுகளுக்கு உதவி வழங்குதல் உட்பட உடனடியாக செயற்படுதல் போன்றவற்றுக்காக நாட்டில் சமுத்திரம் சார் மீட்புக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளதோடு, வணிக கப்பல் செயலகம், இலங்கை விமானப் படை, இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களம் என்பன ஒரு தரப்பாக இணைந்து இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இதன் பிரதான தொழிற்பாட்டு நிலையத்தை கொழும்பில் தாபிப்பதற்கும் இரண்டாம் நிலை தொழிற்பாட்டு நிலையமொன்றை அம்பாந்தோட்டையில் தாபிப்பதற்கும் இவற்றுக்கு மேலதிகமாக காலி, திருகோணமலை, பருத்தித்துறை, முள்ளிக்குளம், அருகம்பே, மட்டக்களப்பு மற்றும் கல்அறாவ ஆகிய திறமுறை சார்ந்த ஏழு முக்கிய இடங்களில் துணை பிரிவுகளைத் தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பித்து நான்கு (04) வருட காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.