• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1929 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்தல்
- 2020 ஆம் ஆண்டளவில் போதைப் பொருளுக்கான கேள்வி, விநியோகம் மற்றும் போதைப் பொருள் பாவனை மிக குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவருவது போதைப்பொருள் தொடர்பிலான பிரச்சினை சம்பந்தமாகவுள்ள அரசாங்கத்தின் குறியிலக்காகும். இதன்போது போதைப்பொருள் சட்டங்களை நடைமுறைப் படுத்தும் சகல நிறுவனங்கள், மாகாண மற்றும் பிராந்திய நிருவாகங்கள் அடங்கலாக போதைப்பொருள் சம்பந்தமாக நேரடியாக செயலாற்றும் அரசாங்க நிறுவனங்கள் உட்பட உரிய ஏனைய முகவராண்மைகள் மிக பலம் மிக்கதாக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக தற்போது நடைமுறையிலுள்ள சட்ட முறைமையைத் திருத்துவது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது கஞ்சா உட்பட ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதோடு, இந்த வர்த்தகம் காரணமாக எதிர்கால சந்ததியினர் பாரிய ஆபத்திற்கு முகம்கொடுத்து வருகின்றனர். இலங்கை பொலிஸ் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றினால் செய்யப்படும் சுற்றிவளைப்புகளினால் இலங்கையில் கஞ்சா செய்கை குறைவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் கேரள கஞ்சா பாவனை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக, அபின், கொக்கேன், ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை, உடைமையில் வைத்திருத்தல், இறக்குமதி செய்தல் அல்லது ஏற்றுமதி செய்தல் சம்பந்தமாக வழங்கப்படும் தண்டனைகளைத் திருத்துவதற்கு, சட்டத்தின் மூன்றாம் அட்டவணையைத் திருத்துவதற்கு, கைதுசெய்து தடுத்து வைக்கும் காலஎல்லையைத் திருத்துவதற்கு உரியதாக சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம், இலங்கை சுங்கம், மதுவரி திணைக்களம் ஆகிய சட்டத்தை நடைமுறைப் படுத்தும் நிறுவனங்களின் பங்களிப்புடன் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிகள் தொடர்பில் உள்ள உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 1929 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் 1984 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் (திருத்த) சட்டம் ஆகியவற்றை திருத்தும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.