• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் "கிராம சக்தி" பணியகமொன்றைத் தாபித்தலும் "கிராம சக்தி" நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதலும்
- கடந்த காலம் முழுவதும் நடைமுறைபடுத்திய பல்வேறுபட்ட சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் விளைவாக 1990 ஆம் ஆண்டில் 26.1 சதவீதமாக இருந்த இலங்கையின் வறுமை மட்டமானது 2011 ஆம் ஆண்டளவில் 6.7 சதவீதமாக குறைவடைந்தது. 2017 ஆம் ஆண்டு இலங்கையில் "வறுமை ஒழிப்பு ஆண்டாக" பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதோடு, இதற்கமைவாக பிராந்திய மட்டத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் வறுமை நிலையினை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள "கிராம சக்தி" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் 10 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரை வறுமை மட்டத்தை காட்டி நிற்கும் 700 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தெரிவு செய்து, இந்தப் பிரிவுகளில் வசிக்கும் குடும்பங்களில் 80 சதவீதமானோர்கள் கலந்து கொள்ளும் பொதுச் சபை யொன்றையும் பணிப்பாளர் சபையொன்றையும் கொண்ட மக்கள் கம்பனியொன்று தாபிக்கப்படவுள்ளது. இந்த மக்கள் கம்பனிகளின் பிரதிநிதிகளை பயிற்றுவித்து கிராமத்தில் நிலவும் வறுமை, நிலையை இல்லாதொழிப்பதற்கு கைகொடுக்கும் வகையில் இந்த சமூக பரிபாலன கம்பனிகளுக்கு அபிவிருத்தி நிதிகள் வழங்கப்படுவதோடு, 2017 ஆம் ஆண்டின் இறுதியில் குறித்த சகல கிராமங்களினதும் அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் வழங்கப் படுவதற்கு இயலுமாகும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த 700 சமூக பரிபாலன கிராமங்களுக்கு மேலதிகமாக "உற்பத்தி கிராமங்கள்" ஆக அபிவிருத்தி செய்யக்கூடிய நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள 300 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தெரிவு செய்து, ஏற்றுமதிக்கு பொருத்தமான உற்பத்திகளை அல்லது உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்து இறக்குமதியை குறைக்கக்கூடிய உற்பத்திகளை விருத்தி செய்வதற்கு தேவையான தொழிநுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்கி புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைவாக, இந்த "கிராம சக்தி" நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்க, தனியார், மற்றும் மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.