• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- கிராமிய பொருளாதார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 241 உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களையும் 145 வாழ்வாதார அபிவிருத்தி கருத்திட்டங்களையும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு 2016 ஆம் ஆண்டில் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. இதற்கமைவாக, பிரதேச வறுமை மட்டத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, முழுநாட்டையும் தழுவும் விதத்தில் ஏனைய மாவட்டங்களில் மேற்போந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனவும் இனங் காணப்பட்டுள்ளது. இதன் கீழ் உரிய மாவட்டங்களின் கிராமிய நுழைவுப் பாதைகளை அபிவிருத்தி செய்தல், சிறிய நீர்ப்பாசனங்களை நவீனமயப்படுத்தல், குடிநீர்த் திட்டங்கள், சிறிய பாலங்கள் மற்றும் மதகுகள் போன்ற இனங்காணப்பட்ட பொது வசதிகளை அபிவிருத்தி செய்தல், இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிக் கருத்திட்டங்கள், மிருகப் பரிபாலனம், கடற்றொழில் மற்றும் பயிர்ச்செய்கைக் கருத்திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட உரிய அரசாங்க நிறுவனங்களின் ஊடாக கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது 2017 ஆம் ஆண்டில் அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு மேலதிகமாக முல்லைத்தீவு, காலி, மொனராகலை, இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கும் இவற்றுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்வதற்குமாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.