• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறைச்சாலைகளில் இடநெரிசல் மற்றும் சிறைச்சாலைகளை மறுசீர மைத்தல் சார்பில் நீதிமன்ற மற்றும் சட்ட காரணங்களை இனங்காணுதல்
- சிறைச்சாலைகளில் இடநெரிசலுக்கு காரணமாக அமையும் நீதிமன்ற மற்றும் சட்ட காரணங்களை இனங்காண்பதற்கும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதற்கான பிரேரிப்புக்களைச் சமர்ப்பிக்கும் பொருட்டும் நியமிக்கப்பட்டுள்ள தாபனங்களுக்கிடையிலான செயலணியின் முதலாவது அறிக்கை மூலம் பின்வரும் சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* சிறைத்தண்டனை வழங்குவதற்குப் பதிலாக சமுதாயம்சார் சீர்திருத்த முறைகளை வினைத்திறனுடன் பயன்படுத்திக் கொள்ளல்.

* தண்டப் பணங்களை செலுத்த முடியாமையினால் சிறைத்தண்டனை வழங்குவதற்குப் பதிலாக உரிய தண்டப் பணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள 1995 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவை (திருத்த) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்.

* நீதவான் நீதிமன்றங்களுக்கு நீதிமன்ற அதிகாரமில்லாத வழக்குகள் சம்பந்தமாக சட்டமா அதிபரினால் உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும்வரை குறித்த வழக்கு நடவடிக்கைகளை நீதவான் நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக நடாத்திச் செல்லுதல் அத்துடன் இந்த செயற்பாட்டின்போது உரிய வழக்கு சம்பந்தப்பட்ட கோவைகள் காணாமல்போவதைத் தடுப்பதற்காக முகாமைத்துவ தகவல் முறைமையொன்றை நடைமுறைப்படுத்துதல்.

* குற்றங்கள் தொடுக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை பிணைகளின்மீது விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நீதிபதிகள் மாதத்திற்கு ஒருதடவை செய்யும் சிறைச்சாலை மேற்பார்வை விஜயங்களை கண்காணித்தல்.

* 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக பிணை வழங்கக்கூடிய குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் பிணை வழங்கும் முறையைப் பயன்படுத்துதல்.

* மரணதண்டனையை ஆயுட்காலம் முழுவதும் சிறைத்தண்டனையாகக் குறைப்பதற்கான சாத்தியம் பற்றி பரிசீலனை செய்தல்.

* புதிதாக சிறைச்சாலைகளை நிருமாணித்தலும் இடம் நகர்த்துதலும்.

* சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் பணியாட்டொகுதியினருக்கு பாதுகாப்பானதும் பொருத்தமானதுமான சூழலை உருவாக்குதல்.

இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினாலும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.